ஆவடி அருகே பரபரப்பு 3 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் விசாரணை

ஆவடி, அக்.24: ஆவடி அருகே 3 தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து ஆவடி போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர் பற்றி விசாரித்து வருகின்றனர். ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பரித்திப்பட்டு வேலம்மாள் பள்ளி, செவ்வாய்ப்பேட்டை வேலம்மாள் பள்ளி மற்றும் திருமழிசை சென்னை பப்ளிக் ஸ்கூல், ஆகியவை இயங்கி வருகின்றன. இந்த தனியார் பள்ளிகளில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், 3 பள்ளிகளிலும் வெடிகுண்டு வைத்திருப்பதாக நேற்று முன்தினம் இரவு ஆவடி காவல் ஆணையரக கட்டுப்பாட்டு அறைக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனை அறிந்த காவல் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் உடனடியாக பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். மேலும், வெடிகுண்டு நிபுணர்கள் தங்கமணி தலைமையிலான குழுவினர் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு தனித்தனிக் குழுவாக விரைந்தனர். பள்ளி வளாகம் முழுவதும் மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு கண்டறியும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரம் தேடுதல் வேட்டையின் முடிவில் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை.

மேலும், வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. தீபாவளி பண்டிகையையொட்டி 5 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்து பள்ளிகள் நேற்று திறக்கப்பட்ட நிலையில், வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, ஆவடி காவல் நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெகன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: