பீகார் தேர்தலில் இந்தியா கூட்டணிக்குள் மோதல்; லாலுவை சந்தித்தார் காங்கிரஸ் தூதர்: இன்று மனுக்கள் வாபஸ் பெறப்படுமா?

பாட்னா: பீகார் தேர்தலில் இந்தியா கூட்டணிக்குள் ஏற்பட்ட மோதலை தீர்க்க லாலுபிரசாத் யாதவை காங்கிரஸ் தூதர் அசோக் கெலாட் சந்தித்து பேசினார். பீகார் சட்டப்பேரவைக்கு மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 121 தொகுதிகளில் முதற்கட்டமாக நவ 6ஆம் தேதியும், 122 தொகுதிகளில் இரண்டாம் கட்டமாக நவ.11 ஆம் தேதியும் தேர்தல் நடக்கிறது. முதற்கட்ட தேர்தலுக்கான மனுத்தாக்கல் அக்.17ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தலுக்கு மனுத்தாக்கல் அக்.20ஆம் தேதியும் முடிந்து விட்டது. ஆனால் 11 தொகுதிகளில் ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒன்றுக்கொன்று எதிராக ‘நட்பு ரீதியான’ போட்டியில் களமிறங்கியுள்ளன.

தேசிய ஜனநாயக கூட்டணியிலும் மோதல் இருந்தாலும், கூட்டணிக்கட்சி வேட்பாளர்களை எதிர்த்து யாரும் களம் இறங்கவில்லை. ஆனால் இந்தியா கூட்டணியில் 11 தொகுதியில் போட்டி வேட்பாளர்களை நிறுத்தி இருப்பது இந்தியா கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த பரபரப்புக்கு மத்தியில் இரண்டாம் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள். எனவே அதற்கு முன்பு இந்தியா கூட்டணியில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை சரிசெய்யும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

காங்கிரஸ் தூதராக மூத்த தலைவரும், ராஜஸ்தான் முன்னாள் முதல்வருமான அசோக் கெலாட் நேற்று பீகார் தலைநகர் பாட்னா வந்தார். அவர் ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத்தை சந்தித்து பேசினார்.
அதன்பின்னர் கெலாட் கூறுகையில்,’ மகாராஷ்டிரா போன்ற முக்கியமான மாநிலத்தில் படுதோல்வியடைந்த பிறகு, பீகாரில் வெற்றி பெறுவது இந்தியா கூட்டணிக்கு மிகவும் முக்கியம். தேஜஸ்வியாதவ் முதல்வர் வேட்பாளர் என்ற அறிவிப்பை நாங்கள் ஏன் வெளியிட வேண்டும் என்று நீங்கள்(பத்திரிகையாளர்கள்) விரும்புகிறீர்கள்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு வாக்காளர் அதிகார யாத்திரையின் போது, ​​ராகுல் மற்றும் தேஜஸ்வி இடையேயான நட்பை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இரு தலைவர்களும் மாநிலம் முழுவதும் ஒன்றாக பயணம் செய்வார்கள். அவர்கள் சரியான நேரத்தில் பொருத்தமான முடிவை எடுப்பார்கள். ஐந்து அல்லது பத்து இடங்களில் நட்புப் போட்டி பெரிய விஷயமல்ல. இருப்பினும் இன்று வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள். அதற்குள் அனைத்து பிரச்னைகளும் சரியாகிவிடும் என்று நாங்கள் நம்புகிறோம்’ என்று கூறினார்.

11 தொகுதிகளில் நேருக்கு நேர்
இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), இடதுசாரி கட்சிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி , சிபிஐ (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) லிபரேஷன், மார்க்சிஸ்ட், விகாஷீல் இன்சான் கட்சி (விஐபி) ஆகிய கட்சிகள் உள்ளன. பீகாரில் உள்ள 243 சட்டமன்ற இடங்களுக்கு, ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) 143 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. காங்கிரஸ் 60 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் 9 வேட்பாளர்களையும், மார்க்சிஸ்ட் 4, சிபிஐ(எம்எல்) லிபரேஷன் 20, விஐபி 15 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்த கட்சிகள் 243 தொகுதிகளில் குறைந்தது 11 தொகுதிகளில் நட்பு ரீதியில் மோத உள்ளனர். இதில் 5 தொகுதிகள் முதற்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் பகுதிகள் ஆகும்.

இந்தியா கூட்டணி கட்சிகள் நட்பு ரீதியில் மோதும் தொகுதிகள் விவரம்:
1. நர்கதியாகஞ்ச்: காங்கிரஸின் ஷஷ்வத் கேதார் பாண்டே vs ஆர்ஜேடியின் தீபக் யாதவ்
2. வைஷாலி: காங்கிரஸின் சஞ்சீவ் சிங் vs ஆர்ஜேடியின் அஜய் குஷ்வாஹா
3. ராஜா பகர் (தனி): காங்கிரஸின் பிரதிமா குமாரி vs இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மோகித் பாஸ்வான்
4. பச்வாரா: காங்கிரசின் பிரகாஷ் தாஸ் vs இ.கம்யூனிஸ்ட் கட்சியின் அவதேஷ் குமார் ராய்
5. பீகார்ஷரீப்: காங்கிரஸின் உமர்கான் vs இ. கம்யூனிஸ்ட் கட்சியின் சிவபிரசாத் யாதவ்
6. ரோசரா: காங்கிரஸின் பி.கே.ரவி vs இ.கம்யூனிஸ்ட் கட்சியின் லக்ஷ்மண் பாஸ்வான்
7. லால்கஞ்ச்: ஆர்ஜேடியின் ஷிவானி சுக்லா vs காங்கிரசின் ஆதித்ய குமார் ராஜா
8. தாராபூர்: ஆர்ஜேடியின் அருண் சா vs விஐபி வேட்பாளர் சகல்டியோ பிந்த்
9. கஹல்கான்: காங்கிரஸின் பிரவீன் சிங் குஷ்வாஹா vs ஆர்ஜேடியின் ரஜ்னிஷ் பார்தி
10. செயின்பூர்: ஆர்ஜேடியின் பிரிஜ் கிஷோர் பைண்ட் vs விஐபி பால்கோவிந்த் பிந்த்
11 பிப்ரா: சிபிஐ(எம்எல்)எல்-இன் அனில் குமார் vs சிபிஐ(எம்)-இன் ராஜ்மங்கல் பிரசாத்

ஒப்பந்த ஊழியர்கள் நிரந்தரமாக்கப்படுவர்: தேஜஸ்வி
பீகாரில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அரசு துறைகளில் நியமிக்கப்பட்டுள்ள அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களும் நிரந்தரமாக்கப்படுவார்கள். அவர்கள் சமூக அணிதிரட்டுபவர்கள் என்று அழைக்கப்படுவார்கள். மாத சம்பளம் ரூ.30,000 வழங்கப்படும் என்று தேஜஸ்வி யாதவ் உறுதியளித்தார்.

லாலு கட்சி வேட்பாளரின் மனுவை ரத்து செய்த தேர்தல் ஆணையம்
பீகார் மாநிலத்தில் மோகானியா தொகுதியில் லாலுபிரசாத்யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் வேட்பாளராக ஸ்வேதா சுமன் நிறுத்தப்பட்டார். கைமூர் மாவட்டத்தில் உள்ள இந்த தொகுதி பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி. இந்த தொகுதியில் மனு செய்த ஸ்வேதா சுமன் உ.பி.யைச் சேர்ந்தவர் என்பதால் அவரது வேட்புமனுவை தேர்தல் ஆணையம் நேற்று ரத்து செய்தது. பட்டியல் சாதியினருக்கு வரையறுக்கப்பட்ட தொகுதியில் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியிட முடியாது. இதனால் அவரது மனு ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பா.ஜவின் அழுத்தம் காரணமாக தனது மனுவை தேர்தல் ஆணையம் ரத்து செய்ததாக ஸ்வேதா சுமன் குற்றம் சாட்டினார்.

அவர் கூறுகையில்,’பாஜ வேட்பாளர் சங்கீதா குமார் மோகானியாவை வெற்றி பெற வைப்பதற்காக எனது மனு ரத்து செய்யப்பட்டது. நான் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவள் என்பதாலும், பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வேறுமாநிலத்தவர் போட்டியிட முடியாது என்ற அடிப்படையில் அவர்கள் எனது வேட்புமனுவை நிராகரித்தனர். ஆனால் நான் கடந்த 20 ஆண்டுகளாக இங்கு தான் வசித்து வருகிறேன். அப்படி இருக்கும்போது எனது மனுவை எப்படி நிராகரிக்கலாம்?. இது பாஜ உயர்மட்டத் தலைவர்களின் வழிகாட்டுதலின் பேரில் தேர்தல் அதிகாரிகளின் அப்பட்டமான அடாவடித்தனம். அதே சமயம் வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு பாஜ வேட்பாளர் தனது சாதிச் சான்றிதழை சமர்ப்பித்தார். அப்போது கூட அவரது வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. எனவே தேர்தல் அதிகாரிகளின் பாரபட்சமான அணுகுமுறைக்கு எதிராக நான் நிச்சயமாக நீதிமன்றத்தை அணுகுவேன்’ என்று அவர் கூறினார்.

பீகார் மக்களை தேஜஸ்வி ஏமாற்றக்கூடாது: பா.ஜ
வீட்டுக்கு ஒரு அரசு வேலை அறிவிப்பு மூலம் பீகார் மக்களை தேஜஸ்வி ஏமாற்றக்கூடாது என்று பா.ஜ எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக பாஜ தேசிய செய்தித் தொடர்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுதான்ஷு திரிவேதி கூறுகையில்,’ பீகாரில் தேஜஸ்வி அளித்த தேர்தல் வாக்குறுதிகள் கொடூரமான நகைச்சுவை. இதற்கு பீகாரின் தற்போதைய பட்ஜெட்டை விட அதிக நிதி தேவைப்படும். ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாக அவர் உறுதியளித்துள்ளார்.

தற்போதைய கணிப்புகளின்படி, பீகார் மக்கள் தொகை சுமார் 13.5 கோடி. குடும்பங்கள் எண்ணிக்கை 2.90 கோடி. அவர்களின் சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.2 லட்சம் வரை இருக்கும். அதன்படி அவர்களின் சராசரி சம்பளம் ரூ.75,000 என மதிப்பிடப்பட்டால், வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதற்கான செலவு ரூ.29 லட்சம் கோடியாக இருக்கும், அதே நேரத்தில் பீகாரின் தற்போதைய பட்ஜெட் ரூ.3,17,000 கோடியாக உள்ளது. எனவே தேஜஸ்வி யாதவ், புத்தரின் பூமியான பீகார் மக்களை முட்டாளாக்குவதை நிறுத்த வேண்டும்’ என்றார்.

Related Stories: