தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவ கல்லூரிகள் அமைக்க ஒன்றிய அரசிடம் கோரிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!

சென்னை: தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவ கல்லூரிகள் அமைக்க ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நெல்லையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது; ”நெல்லையில் கடந்த 5 ஆம் தேதி வாகன விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த ராபின்சன் என்னும் இளைஞரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது உறவினர்கள் முன் வந்துள்ளனர். இதனையடுத்து அவரது உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.

இந்தாண்டு டெங்கு பாதிப்பு அதிகமாக இல்லை. டெங்குவால் இந்த ஆண்டில் இதுவரை 15 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 8 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 2012 மற்றூம் 2017ம் ஆண்டுகளில் தான் அதிக உயிரிழப்பு ஏற்பட்டது. வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தென்காசி, மயிலாடுதுறை உட்பட தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்” என்றார்

மத்திய பிரதேசம் மாநிலத்தில் இருமல் மருந்து காரணமாக குழந்தைகள் இறந்த விவகாரம் குறித்த கேள்விக்கு அமைச்சர் பதிலளித்திருப்பதாவது; மத்தியப் பிரதேசத்தில் குழந்தைகளின் உயிரைப் பறித்த இருமல் மருந்து விவகாரத்தில், தொடர்புடைய மருந்து தயாரிப்பு நிறுவனத்தை தமிழ்நாட்டில் மூடுவதற்கும், குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சட்டப்படி உரிமத்தை ரத்து செய்து, அந்த நிறுவனத்தை நிரந்தரமாக மூடுவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Related Stories: