மயான பாதை ஆக்கிரமிப்பால் மக்கள் பரிதவிப்பு

போச்சம்பள்ளி, செப்.30: போச்சம்பள்ளி அருகே, மயான பாதைய அழித்து, விவசாய பயன்பாட்டிற்கு ஆக்கிரமித்தால், சடலங்களை அடக்கம் செய்ய வழியின்றி மக்கள் தவிப்பில் இருந்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே பாப்பானூர் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அருகில் உள்ள அரசு நிலத்தை பல வருடமாக மயானமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜிங்கல் கதிரம்பட்டியைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தனது விளை நிலத்திற்கு வழி இல்லாத காரணத்தால் மயானத்தை அழித்து பாதை அமைத்துள்ளார். இதனால், மயானத்திற்கு சடலங்களை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், நாங்கள் காலம் காலமாக அரசு நிலத்தை மயானமாக பயன்படுத்தி வந்தோம். ஆனால், தனி நபர் ஒருவர் அவரது நிலத்திற்கு செல்ல வசதியாக மயான பாதையை ஆக்கிரமித்துள்ளார். எனவே, மயானமாக பயன்படுத்தி வந்த இடத்தை மீண்டும் எங்களுக்கு திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றனர்.இதுதொடர்பாக போச்சம்பள்ளி தாசிலதார் சத்யாவிடம் கேட்டபோது, மயானத்தை தாண்டி 50க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பாதை தேவை. இதை அமைத்து கொடுத்த நிலையில், கிராம மக்களுக்கு மயானம் அமைத்து கொடுக்க வேண்டியது எங்களின் பொறுப்பு. விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories: