மகாளய அமாவாசையை முன்னிட்டு தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்

 

திருப்பூர்,செப்.22: அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறந்ததாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழ் மாதத்தில் தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி மகாளய அமாவாசைகள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க உகந்த நாளாக கருதப்படுகிறது. அந்த வகையில் நேற்று புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு திருப்பூரில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். திருப்பூர் பூங்கா சாலையில் உள்ள ராகவேந்திரர் கோவிலில் உள்ள மண்டபத்தில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். வாழை இலை,தேங்காய், பச்சரிசி, பழம், அகத்திக்கீரை, காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை வைத்து பூஜைகள் செய்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். இதற்காக அதிகாலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தர்ப்பணம் கொடுத்தனர்.இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் முன்னோர்களின் புகைப்படங்கள் முன்பு அவர்களுக்கு பிடித்த உணவுப் பொருட்களை படையலிட்டு வழிபாடு நடத்தினர். திருப்பூரைச் சேர்ந்த பெரும்பாலானோர் திருப்பூருக்கு அருகாமையில் உள்ள நீர்நிலைகளான திருமூர்த்திமலை, கொடுமுடி, தாராபுரம் அமராவதி மற்றும் பவானி கூடுதுறை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்தனர்.

Related Stories: