பனியன் தொழிலாளர்களுக்கு 120 சதவீதம் ஊதிய உயர்வு

திருப்பூர், டிச. 18: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பனியன் நிறுவனம் மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியக்கூடிய தொழிலாளர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது. பனியன் நிறுவன உரிமையாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆலோசனை மேற்கொண்டு விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்துகின்றனர்.

கடந்த 2021ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்ததை தொடர்ந்து புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பாக மூன்று கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்து உள்ளது. இன்னும் புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்படாத நிலையில் திருப்பூர் தொழிற்சங்கங்கள் சார்பில் உரிமையாளர் சங்கங்களிடம் முன் வைக்கப்பட்டுள்ள ஊதிய உயர்வு கோரிக்கை தொடர்பான விளக்க பிரசார இயக்கம் நேற்று நடைபெற்றது.

திருப்பூர் முதலிபாளையம் சிட்கோ பகுதியில் உள்ள தொழிற்பேட்டை முன்பாக தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கங்கள் சார்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. இதில் தொழிற்சங்கங்கள் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளான 120% ஊதிய உயர்வு, 25 ரூபாயாக உள்ள பயணப்படி ரூ.50ஆக உயர்த்தி வழங்க வேண்டும், டீ பேட்டா ரூ.25 என்பதை உயர்த்தி வழங்க வேண்டும். வீட்டு வாடகைப்படியாக தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகள் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பிரசார இயக்கத்தில் சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎப், ஐஎன்டியுசி, ஏடிபி, எச்எம்எஸ், ஐஎன்டியூசி, ஏபிடி, எம்எல்எப், பிஎம்எஸ், டிடிஎம்எஸ் உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர். இதுதொடர்பாக வரும் 26ம் தேதி அடுத்தகட்ட பேச்சுவார்த்தை உரிமையாளர் சங்கங்களுடன் நடைபெற உள்ளது.

Related Stories: