உடுமலை, டிச. 19: உடுமலை நகராட்சியில் வரி செலுத்தாத 11 கடைகளுக்கு நேற்று ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர். உடுமலை நகரில் நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்கள் உள்ளன. இங்கு வாடகை அடிப்படையில் கடைகள் இயங்குகின்றன. வாடகை தொகை மற்றும் பல்வேறு வரியினங்கள் பாக்கி வைத்துள்ளவர்கள் உடனடியாக செலுத்துமாறு நகராட்சி நிர்வாகம் சார்பில் பலமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, நிலுவை வரி செலுத்தாத கடைகளை பூட்டி சீல் வைக்கும் நடவடிக்கையில் நேற்று நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்.
நகராட்சி ஆணையர் தலைமையில் வருவாய்பிரிவு ஆய்வாளர் மோகன் மற்றும் அலுவலர்கள் கல்பனா ரோட்டில் அமைந்துள்ள நகராட்சிக்கு சொந்தமான கடைகள் மற்றும் ராஜேந்திரா ரோட்டில் அமைந்துள்ள தனியார் மற்றும் நகராட்சி கடைகளுக்கு பூட்டி ‘சீல்’ வைத்தனர். மொத்தம் 11 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. அப்போது, சுகாதாரப் பிரிவு அலுவலர்கள் நாட்ராயன், செல்வம் உடன் இருந்தனர்.
நகராட்சியில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து, தண்ணீர், குடிநீர், தொழில் உரிம கட்டணம் மற்றும் தொழில், பாதாள சாக்கடை, காலி மனை இட வரி, குத்தகை இனங்கள் என எந்த வகையாக இருந்தாலும் அந்த வருடத்திற்கான வரியினை உடனடியாக செலுத்துமாறு நகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து வியாபாரிகளும், பொதுமக்களும் நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நகராட்சி ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.
