திஷா பதானி வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்திய 2 பேர் என்கவுன்டரில் பலி: உபி சிறப்பு அதிரடிப்படை போலீஸ் அதிரடி

லக்னோ: எம்.எஸ் டோனி, கங்குவா, கல்கி உள்ளிட்ட தமிழ் படங்களிலும் ஏராளமான தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வருபவர் பிரபல நடிகை திஷா பதானி. இவர் உத்தரபிரதேச மாநிலம் பரேலியை சேர்ந்தவர் ஆவார். அங்குள்ள வீட்டில் திஷா பதானியின் பெற்றோர் வசித்து வருகின்றனர். அந்த வீட்டின் மீது மர்ம நபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். செப்.12ஆம் தேதி அதிகாலையில் நடந்த இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் இத்துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடர்ந்து பாலிவுட் நடிகை திஷா பதானியின் வீட்டிற்குப் பாதுகாப்பு போடப்பட்டது. இத்துப்பாக்கிச்சூட்டிற்கு கோல்டி பிரார் கூட்டத்தைச் சேர்ந்த வீரேந்திர சவான் என்பவர் பொறுப்பேற்றுள்ளார்.

இது தொடர்பாக வீரேந்திர சவான் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,‘‘ நாங்கள்தான் திஷா பதானியின் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினோம். திஷா பதானி நமது மரியாதைக்குரிய இந்து துறவிகளை (பிரேமானந்த் ஜி மகாராஜ் மற்றும் அனிருத்தாச்சார்யா ஜி மகராஜ்) அவமதித்துள்ளார். இது ஒரு டிரெய்லர் மட்டுமே. அடுத்த முறை அவரோ அல்லது வேறு யாரோ நம் மதத்தை அவமதித்தால் அவர்கள் வீட்டில் யாரும் உயிருடன் இருக்க மாட்டார்கள்’ என்று குறிப்பிட்டு இருந்தார். இது குறித்து திஷா பதானியின் தந்தை ஜெகதீஷ் போலீசில் புகார் செய்தார். குற்றவாளிகளைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த சூழலில் உபி மாநிலம் காசியாபாத் டிரோனிக்கா சிட்டியில் பதுங்கி இருந்த குற்றவாளிகள் 2 பேரை போலீசார் என்கவுன்டர் நடத்தி பிடித்தனர். இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் மருத்துவமனையில் உயிரிழந்தனர். விசாரணையில் அவர்கள் அரியானா மாநிலம் ரோஹ்தக்கைச் சேர்ந்த ரவீந்திரன் என்ற கல்லு மற்றும் சோனிபட்டைச் சேர்ந்த அருண் என்பது தெரிய வந்தது. இவர்கள் ரோஹித் கோதாரா – கோல்டி பிரார் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்து இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை உத்தரபிரதேச சிறப்பு அதிரடிப்படையினர் மீட்டனர். இவர்கள் பல குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

* துப்பாக்கிச்சூடு நடத்த காரணம் என்ன?
இந்து மத சாமியார் அனிருத்தாச்சார்யா மகாராஜ் சமீபத்தில் லிவ் இன் உறவில் வாழும் பெண்கள் ஒழுக்கக்கேடானவர்கள் என்று விமர்சனம் செய்திருந்தார். இதற்கு நடிகை திஷா பதானியின் சகோதரி குஷ்பு பதானி சாமியார் அனிருத்தாச்சார்யாவை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். அவரது பதிவில், ‘அவர் என் அருகில் இருந்திருந்தால், பெண்களுக்கு எதிராக அவர் பயன்படுத்திய வார்த்தைகளின் அர்த்தத்தை நான் அவருக்குப் புரிய வைத்திருப்பேன். அவர்கள் தேச விரோதிகள். நீங்கள் ஒருபோதும் அதனை ஆதரிக்கக்கூடாது’என்று குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து சாமியார் அனிருத்தாச்சார்யா, ‘அனைத்து பெண்களையும் அவ்வாறு கூறவில்லை. சிலர் மட்டுமே அப்படி’ என்று விளக்கம் அளித்தார். இந்த சூழலில் குஷ்பு பதானி, சாமியார் அனிருத்தாச்சார்யா மட்டுமல்லாது சாமியார் பிரேமானந்த்ஜி குறித்தும் விமர்சித்ததாக செய்தி பரவியது. இதுதான் துப்பாக்கிச்சூடு நடத்த காரணம் என்று கூறப்படுகிறது.

Related Stories: