புதுடெல்லி: கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பம்பை நதிக்கரையில் உலக ஐயப்ப பக்தர்கள் மாநாடு வரும் 20ஆம் தேதி நடைபெறுகின்றது. இந்த ஐயப்ப பக்தர்கள் மாநாட்டிற்கு எதிராக கேரள உயர்நீதிமன்றத்தில் சில மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் அந்த மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. மேலும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் இந்த பக்தர்கள் மாநாட்டை நடத்தலாம் என்றும் கோயில் புனிதம் முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கூட்டத்திற்காக ஏற்படுத்தப்படும் தற்காலிக கட்டுமானங்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் உள்ளிட்ட பத்துக்கும் அதிகமான கட்டுப்பாடுகளையும் உயர் நீதிமன்றம் விதித்திருந்தது.
இதற்கிடையில் ஐயப்ப பக்தர்கள் கூட்டத்தை நடத்த கேரளா உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று உச்சநீதிமன்ற நீதிபதி பி எஸ் நரசிம்மா தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்றது . அப்போது கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவில் தாங்கள் தலையிட விரும்பவில்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் விதித்து இருக்கக்கூடிய கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.
