நாகர்கோவில், செப். 18: பள்ளிகல்வித்துறை சார்பில் நடத்தப்படும் பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின விளையாட்டு போட்டிகளுக்கு மதிப்பெண் வழங்கு வதில் நடுவர்கள் திணறுகின்றனர்.
தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில், மாவட்ட உடற்கல்வி இயக்குநர் மூலம் கடந்த 2003ம் ஆண்டு முதல், பாரதியார் தினம் தடகள விளையாட்டு போட்டிகளும், குடியரசு தின பிரிவில் டேக் வாண்டோ, சிலம்பம், பீச் வாலிபால், நீச்சல் போன்ற விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது உடற்கல்வி இயக்குநர்கள் தடகளம், பழைய விளையாட்டு போட்டிகள் மற்றும் விதி முறைகளை நன்றாக தெரிந்து வைத்திருப்பார்கள். குமரியை பொறுத்தவரை டேக் வாண்டோ, சிலம்பம், நீச்சல், பீச் வாலிபால் போன்ற புதிய விளையாட்டு போட்டிகளில் அவர்களுக்கு விதிகள் தெரியாது என்பதால், சம்பந்தப்பட்ட போட்டி நடுவர்களாக இருக்கும் உடற்கல்வி இயக்குநர்களுக்கு விதிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும்.
ஆனால், கொரோனாவிற்கு பின்னர் இதுபோன்ற பயிற்சி வழங்கப்படுவதில்லை. இதனால், டேக்வாண்டோ போன்ற புதிய போட்டிகளில், மதிப்பெண் வழங்கும் விதிமுறை தெரியாமல் தவறுதலாக மதிப்பெண் வழங்கப்படுவதாகவும், இதனால், தோற்றவர்கள் வென்றதாக மாநில போட்டிக்கு அனுப்பப்படுவதும், வென்றவர்கள் தோற்றதாக அறிவிக்கப்படும் அவலம் நடைபெறுவதாக சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் கோச்சுகள் புகார்கள் எழுப்பியுள்ளனர். புதிய விளையாட்டுகளின் விதிமுறைகள் தெரியாமல் மதிப்பெண் வழங்குவதால், மாநில, தேசிய அளவில் பதக்கம் வென்றவர்கள் கூட, தவறுதலாக தோற்று போனதாக வெளியேற்றப்படுகின்றனர்.
மேலும், சரியாக விளையாடதவர்கள் வென்றதாக மாநில போட்டிக்கு தகுதி பெறும் போது, அவர்கள் மாநில போட்டியில் தோற்கும் நிலை ஏற்படுகிறது. இதனால், மாநில போட்டியில் குமரி மாவட்டம் பின் தள்ளப்படுகிறது. இதனை உடற்கல்வி இயக்குநர், அதிகாரிகள் வேண்டும் என்றே செய்யாவிட்டாலும், இதனால், சம்பந்தப்பட்ட மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இதுபோன்ற புதிய விளையாட்டு போட்டிகளில், அந்தந்த விளையாட்டுகளின் மாவட்ட கழக கோச்சுகளை நடுவராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை, மாவட்ட நிர்வாகத்திற்கு சம்பந்தப்பட்ட விளையாட்டு கோச்சுகள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் விடுத்துள்ளனர்.
வீடியோ எடுக்க மறுப்பு
பொதுவாக டேக்வாண்டோ உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளின் போது, வீடியோ எடுக்கப்படும். இதில் நடுவர்கள் சரியாக கவனிக்கவில்லை என புகார்கள் வந்தால், வீடியோ காட்சி மூலம் ஆய்வு செய்யப்படும். ஆனால், குமரியில் நடைபெற்ற போட்டிகளின் போது, வீடியோ எடுப்பதில்லை. இதனால், பல நேரங்களில் குழப்பம் ஏற்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்காட் பள்ளியில் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டியில், போட்டி விதிமுறைகள் தெரியாமல் தவறுதலாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாக பிரச்னைகள் எழுந்தன. இதனால், அதிகாரிகள், கோச்சுகள், பெற்றோர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. எனவே போட்டிகளை வீடியோவாக எடுக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.
