திண்டிவனம் அருகே ஏரி மதகு உடைந்ததால் குடியிருப்பு பகுதியில் புகுந்த மழை நீரால் மக்கள் தவிப்பு

திண்டிவனம், டிச. 18: திண்டிவனம் அருகே ஏரியின் மதகு உடைந்து குடியிருப்பு பகுதியில் மழைநீர் புகுந்ததால் மக்கள் தவித்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கீழ்பேரடிக்குப்பம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊரிலுள்ள ஏரி, நிவர் மற்றும் புரெவி புயலின் காரணமாக பெய்த மழையினால் முழு கொள்ளளவை எட்டியது. நேற்று பரவலாக கனமழை பெய்ததால் ஏரியில் இருந்த மதகு பழுதடைந்து நீர் கசிய தொடங்கியது. பின்னர் மதகு உடைந்து அதிக அளவில் தண்ணீர் வெளியேறிது. இதனால் ஏரியில் இருந்த தண்ணீர் முழுவதும் குடியிருப்பு பகுதியில் புகுந்தது. குடியிருப்பில் இருந்த மக்கள் அனைவரும் சாலைகளில் கைக்குழந்தைகளுடனும், முதியவர்களுடனும் பசியால் தவித்து நின்றனர். மேலும் அந்த கிராமத்தில் உள்ள அரசு பள்ளி பழுதடைந்துள்ளதால் நிவாரண முகாம் இல்லாமலும் தவித்து வருகின்றனர்.

இந்த ஏரியின் மதகு பழுதடைந்து இருப்பதாக கடந்த 10 ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஏரி மதகு உடைந்த தகவல் அறிந்து பாதிக்கப்பட்ட கிராமத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், ஏடிஎஸ்பி தேவநாதன், டிஎஸ்பி கணேசன், வட்டாட்சியர் செல்வம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள்  குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த மழைநீரை பார்வையிட்டனர். மதியம் 2.30 மணி அளவில் உணவும், அருகில் உள்ள கீழ் எடையாளம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் நிவாரண முகாமுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தனர்.

Related Stories: