முத்துப்பேட்டை,செப்.9: முத்துப்பேட்டை அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகள் ஆசிரியர் தினவிழாவையொட்டி ‘அ’ வடிவில் அமர்ந்து ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த மேலநம்மங்குறிச்சி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் சார்பில் ஆசிரியர் தின விழா நேற்று பள்ளி ஆசிரியர் வீரப்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
இதில் முன்னதாக மாணவர்கள் பள்ளி வளாகத்தில் ‘அ’ வடிவில் அமர்ந்து ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்துகளை பகிர்ந்துக் கொண்டனர். அப்போது மாணவர்களுக்கு ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கினர். இதில் பள்ளி ஆசிரியர்கள், சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி ஆசிரியர்கள், பணியாளர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியை அபி நன்றி கூறினார்.
