மரக்காணம் அருகே கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

மரக்காணம், ஆக. 30: மரக்காணம் அருகே கே.என்.பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள கெங்கை அம்மன் கோயிலுக்கு ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் பால் சாகை வார்த்தல் விழா நடைபெறுவது வழக்கம். இதுபோல் கடந்த வாரம் கோயிலுக்கு பால் சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. கே.என்.பாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இவர்கள் காணிக்கையாக உண்டியலில் பணம் செலுத்தியுள்ளனர். இந்த உண்டியல் பணத்தை எடுப்பதற்காக நேற்று காலை அப்பகுதி முக்கியஸ்தர்கள் கோயிலுக்கு சென்றுள்ளனர். அப்போது கோயில் எதிரில் இருந்த உண்டியல் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் திருடப்பட்டிருந்தது. உண்டியலில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியான அப்பகுதி கோயில் முக்கியஸ்தர்கள் அருகில் இருந்த சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்துள்ளனர். அப்போது இரண்டு மர்ம நபர்கள் முகமூடி அணிந்துகொண்டு கையில் வீச்சரிவாளுடன் வந்து உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச் சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தது. இதையடுத்து சிசிடிவி காட்சி பதிவுகளுடன் கே.என். பாளையம் கிராம மக்கள் மரக்காணம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: