சிதம்பரம், ஆக. 29: சிதம்பரத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்துள்ள அண்ணாமலை நகரில், மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று காலை கல்லூரி வளாகத்தில் முதல்வர் அலுவலகத்தில் உள்ள தொலைபேசிக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து, கல்லூரியில் வெடிகுண்டு வைத்துள்ளதாக தெரிவித்துவிட்டு தொடர்பை துண்டித்துள்ளார். இதனையடுத்து மருத்துவக் கல்லூரி முதல்வர் திருப்பதி, அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் மற்றும் போலீசார், மருத்துவக் கல்லூரிக்கு விரைந்து சென்று, விசாரணை மேற்கொண்டனர். அப்போது கல்லூரியில் இருந்த மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் உள்ளிட்டவர்கள் தானாகவே வெளியேறி அலுவலக வளாகம் எதிர்புறம் திரண்டு இருந்தனர்.
அதனை தொடர்ந்து கடலூரில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார், மோப்ப நாய்கள், பீட், லியோ உதவியுடன் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதா என மருத்துவக் கல்லூரி கட்டிடம் முழுவதும் தீவிரமாக சோதனை செய்யப்பட்டது. நிர்வாக அலுவலகம் மற்றும் மாணவர்களின் வகுப்பறை, அலுவலர்கள் கட்டிடம், வெளிப்புற வளாக பகுதி, உள்புற வளாக பகுதி, பல் மருத்துவமனை வளாகம், உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மெட்டல் டிடேக் கருவி மூலமும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. காலை 11 மணி முதல் மாலை வரை நடைபெற்ற இந்த சோதனையில் வெடிகுண்டு இல்லை என தெரியவந்தது. இதுகுறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, மருத்துவ கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
