குத்தாலம் கடைவீதியில் வணிக நிறுவனங்களுக்கு பாதிப்பின்றி நிலம் கையகப்படுத்த வேண்டும்

நாகை, டிச.15: மாநில அரசின் நெடுஞ்சாலை திட்டத்திற்கு குத்தாலம் பகுதியில் நிலம் கையகப்படுத்தல் செய்யும் போது கடைவீதியில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு பாதிப்பு இல்லாமல் நிலம் எடுக்க வேண்டும் என்று குத்தாலம் பகுதியைச் சேர்ந்த வர்த்தக சங்கத்தினர் நாகை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். குத்தாலம் வர்த்தக சங்க தலைவர் செல்வம் தலைமையில் நாகை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கொடுத்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சார்பில் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்படவுள்ளது. இதற்காக கும்பகோணம் தொடங்கி சீர்காழி வரை சாலைகளை அகலப்படுத்த நிலங்கள் அபகரிப்பு செய்யப்படவுள்ளது. இதற்காக அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு கடையிலும் எதுவரை இடம் எடுக்கப்படும் என்பதை நெடுஞ்சாலைத்துறையினர் அளவீடு செய்து குறியீடு செய்துள்ளனர். இந்த கடையை நம்பி தினந்தோறும் பிழைப்பு நடத்தி வரும் எங்களது கடையின் பெரும்பாலான பகுதி இடிக்கப்படவுள்ளது. எனவே கலெக்டர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து வணிக நிறுவனங்களுக்கு பாதிப்பு இல்லாமல் நிலங்களை எடுக்க நெடுஞ்சாலைத்துறைக்கு உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: