தனியார் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நச்சு துகள்களால் பொதுமக்கள் பீதி: கலெக்டர் நேரடியாக ஆய்வு செய்ய கோரிக்கை

கும்மிடிப்பூண்டி, மே 4: புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் நச்சு துகள்களால் காற்று மாசடைந்து வருவதுடன் பாதம் மற்றும் உள்ளங்கைகளில் கரும் துகள்கள் பதிவான வீடியோ காட்சிகள் வாட்சப் குழுக்களிலும் பரவி வருகிறது. இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வழுத்து வருகிறது. கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் 1000க்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பெரும்பாலான மக்கள் விவசாயத்தை நம்பி தான் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் ஏற்கனவே சித்ரா கூட்டு, சூர்யா தேவ் இதுபோன்று பல்வேறு இரும்பு மற்றும் மின் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறுகின்ற நச்சு கருப்பு துகள்கள், இங்குள்ள பொதுமக்களுக்கு பல்வினை நோய் உண்டாகி வருவதுடன் மருத்துவமனைகளில் உடல் பாதிப்புக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து, புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட இரும்பு உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்கள் செய்யும் தனியார் தொழிற்சாலையில் இருந்து அதிகப்படியான நச்சு கருப்பு துகள்கள் மேற்கண்ட ஊராட்சிகளில் உள்ள வீடுகள், மரம், செடி, கொடிகள், தண்ணீர் உள்ளிட்ட இடங்களில் படிந்ததால் இதனை கவனிக்காமல் குழந்தைகள் விளையாடுவது, சுவாசிப்பதால் வாய் வழியாக புகுந்து குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே, ஒன்றிய கவுன்சிலர் மதன்குமார் தலைமையில் கடந்த ஆண்டு மேற்கண்ட தொழிற்சாலை முன்பு 50க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதை அறிந்த சிப்காட் போலீசார் மற்றும் கும்மிடிப்பூண்டி தாசில்தார் கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அப்போது ஒன்றிய கவுன்சிலர் அவர்களிடம் கூறுகையில், தங்கள் பகுதியில் உள்ள வீடுகளில் தனியார் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கருப்பு துகள்களால் அதை சுவாசிக்கும்போது குழந்தைகள் முதல் பெரியவர் வரை புற்றுநோய், கடும் இரும்பல், சளி மற்றும் மாரடைப்பு குறித்த நோய்கள் உண்டாகிறது என எடுத்துரைத்தார். இது சம்பந்தமாக தொழிற்சாலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வந்திருந்த வட்டாட்சியர் கண்ணன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இது சம்பந்தமாக மாசு கட்டுப்பட்டு வாரியத்திற்கு புகார் மனு கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், மாசு கண்டறியும் கருவிகள் வைத்து சோதனை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் இதுநாள் வரை மீண்டும் மேற்கண்ட தொழிற்சாலையில் இருந்து தினந்தோறும் வெளியேறும் கரும்புகைகளால் வீடுகளில் கரும்புகை படிவதாலும் குடும்பப் பெண்கள் வாசக்கதவை எப்போது எல்லாம் திறக்கும்போது பாதையில் நடந்து செல்லும்பொழுதும் கால்கள் மற்றும் கருப்பு துகள்கள் பதிவதுடன் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியவில்லை. இது சம்பந்தமாக கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து வாட்சப் குழுக்களிலும் நேற்று மேற்கண்ட தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கருப்பு துகள்கள் வீடுகளில் படிவது மட்டும் அல்லாமல் கால் பாதங்கள் மற்றும் உள்ளங்கைகளில் பதியும் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் த.பிரபு சங்கர் நேரடியாக ஆய்வு செய்ய வேண்டுமென பொதுமக்கள் சார்பாக கோரிக்கை வைக்கின்றனர்.

The post தனியார் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நச்சு துகள்களால் பொதுமக்கள் பீதி: கலெக்டர் நேரடியாக ஆய்வு செய்ய கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: