கூடலூர், ராசிபுரம் தொகுதி திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு: கள நிலவரம் குறித்து கேட்டறிந்தார்

சென்னை: கூடலூர், ராசிபுரம் தொகுதி திமுக நிர்வாகிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனித்தனியாக சந்தித்து பேசினார். தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளன. தேர்தலை எதிர்கொள்ள ஆளுங்கட்சியான திமுக முழுவீச்சில் தயாராகி வருகிறது. அதன் ஒருபகுதியாக 8 மண்டல பொறுப்பாளர்கள், 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தொகுதி பார்வையாளர்களை நியமித்து தமிழகம் முழுவதும் கூட்டங்களை நடத்தி, தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளது.

தொகுதி பார்வையாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு உள்பட்ட தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின், “உடன் பிறப்பே வா” என்ற பெயரில் ‘ஒன் டூ ஒன்’ மூலம் தொகுதி வாரியாக நிர்வாகிகளை கடந்த ஜூன் ஜூன் மாதம் 13ம் தேதி முதல் தனித்தனியாக நேரில் சந்தித்து பேசி வருகிறார். இந்த நிலையில் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூடலூர் மற்றும் ராசிபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட திமுக நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

இதில் தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் பங்கேற்றனர். திமுக நிர்வாகிகள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து பேசினார். சந்திப்பின் போது தொகுதி கள நிலவரம், வெற்றி வாய்ப்பு நிலவரம், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து கேட்டறிந்தார். திமுக அரசின் திட்டங்கள் குறித்து மக்கள் என்ன சொல்கிறார்கள். அரசிடம் வேறு என்ன மாதிரியான நல உதவிகளை எதிர்ப்பார்க்கிறார்கள் என்பது குறித்தும் கேட்டறிந்தார். அப்போது, நிர்வாகிகள் திமுக அரசின் நலத்திட்டங்களால் ஒரு வீட்டில் 2 முதல் 3 பேர் வரை பயனடைந்துள்ளனர். மகளிர் உரிமை தொகை திட்டம், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான மாத உதவி தொகை திட்டம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

பேருந்துகளில் மகளிருக்கு இலவசம் என்பதால் மாதத்திற்கு பெருமளவு பணம் மிச்சமாகிறது என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். இதனை முதல்வர் மகிழ்ச்சியுடன் கேட்டார். முதல்வர் மு.க.ஸ்டாலின் மனம் விட்டு பேசியதால் நிர்வாகிகள் மகிழ்ச்சியடைந்தனர். அது மட்டுமல்லாமல் கடந்த தேர்தலை விட வரும் சட்டசபை தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றி பெற பாடுபட வேண்டும் என்றும் அவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். தன்னை சந்தித்த நிர்வாகிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புத்தங்களை பரிசாக வழங்கினார்.

Related Stories: