சென்னை: துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ. கூட்டணி சார்பில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் எடப்பாடியை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். இந்திய துணை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 9ம் தேதி நடக்கிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடக்கிறது. அதை தொடர்ந்து உடனே வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவு அன்றைய தினமே அறிவிக்கப்படும். துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியின் சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆந்திராவை சேர்ந்த பி.சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார். பாஜ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஒவ்வொரு மாநிலமாக சென்று பாஜ கூட்டணி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி நேற்று முன்தினம் தமிழகத்தில் இருந்து ஆதரவு திரட்டுதலை தொடங்கினார். நேற்று முன்தினம் சென்னை வந்த சுதர்சன் ரெட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் மக்களவை, மாநிலங்களை எம்பிக்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘சட்டநீதிக்காகவும், மனித உரிமைகளுக்காகவும் போராடிய, வாதாடிய, தீர்ப்பு வழங்கிய சுதர்சன் ரெட்டி இந்திய ஜனநாயகத்தைக் காக்க, நாடாளுமன்ற மரபுகளைக் காக்க, மக்களாட்சியைக் காக்க, அரசியலமைப்பைக் காக்க குடியரசுத் துணை தலைவராக வெற்றி பெற்று வரவேண்டும்” என்றார்.
இந்நிலையில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் துணை குடியரசு தலைவராக அறிவிக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக அவர் தமிழகம் வர உள்ளார். விநாயகர் சதுர்த்தியான நாளை அவர் தமிழகம் வர இருப்பதாக பாஜ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை, நாளை மறுநாள் என 2 நாட்கள் அவர் சென்னையில் இருப்பார் என்று கூறப்படுகிறது. அப்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பிரதான கட்சியான அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டுவார் என்று கூறப்படுகிறது. தற்போது, 3வது கட்ட சுற்றுப்பயணத்தை எடப்பாடி முடித்துள்ளார். தனது 4வது கட்ட சுற்றுப்பயணத்தை வரும் 1ம் தேதி முதல் தொடங்க உள்ளார். இந்த இடைப்பட்ட நேரத்தில் அவரை சந்தித்து ஆதரவு திரட்ட பொன்.ராதாகிருஷ்ணன் திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
