நியூயார்க்: ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரான யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் நம்பர் 1 வீராங்கனையான பெலாரசின் 27 வயதான அரினா சபலென்கா 7-5, 6-1 என்ற செட் கணக்கில், சுவிட்சர்லாந்தின் 26 வயது ரெபேக்கா மசரோவாவை வீழ்த்தினார். 7ம் நிலை வீராங்கனையான இத்தாலியின் 29 வயது ஜாஸ்மின் பயோலினி 6-2, 7-6 என ஆஸ்திரேலியாவின் 25 வயது டெஸ்டானி ஐயாவாவை சாய்த்தார்.
சுவிட்சர்லாந்தின் பெலின்டா பென்சிக் 6-3, 6-3 என்ற நேர் செட்டில் சீனாவின் ஜாங் ஷுவாய்யையும், 36 வயதான பெலாரசின் விக்டோரியா அசரென்கா 7-6, 6-4 என அமெரிக்காவின் ஹினா இனூவையும் வீழ்த்தி 2வது சுற்றுக்குள் நுழைந்தனர். அமெரிக்காவின் எம்மா நவரோ ரஷ்யாவின்அனஸ்தேசியா, லாட்வியாவின் ஜெலினா ஓஸ்டாபென்கோ, அமெரிக்காவின் கேட்டி மெக்னலி ஆகியோரும் முதல் சுற்றில் வெற்றிபெற்று 2வது சுற்றுக்கு தகுதி பெற்றனர். 4ம் நிலை வீராங்கனையான ஜெசிகா பெகுலா 6-0, 6-4 என எகிப்தின் மேயர் ஷெரிப்பை வீழ்த்தினார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் 7ம் நிலை வீரரான செர்பியாவின் 38 வயதான ஜோகோவிச் 6-1, 7-6, 6-2 என அமெரிக்காவின் லர்னர் டியென்னை வென்றார். 4ம் நிலை வீரரரான அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸ், 7-5, 6-2, 6-3 என சகநாட்டை சேர்ந்த எமிலியோ நவாவை வீழ்த்தினார். ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்சன், செக் குடியரசின் தாமஸ் மச்சாச் ஆகியோரும் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.
