மதுரை, ஆக. 23: அழகர்கோயிலுக்கு தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில் நேற்று காஞ்சிபுரத்தில் இருந்து 23 பேர் அழகர்கோயிலுக்கு சுற்றுலா வேனில் வந்திருந்தனர். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரமேஷ் (26) என்பவர் வேனை ஓட்டி வந்தார். மலை மீதுள்ள ராக்காயி அம்மன், சோலைமலை முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தபின், மலையிலிருந்து பக்தர்களுடன் வேன் கீழே இறங்கியது.
அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் மலைக்கு கீழே உள்ள கன்னிமார் கோயிலின் அருகே உள்ள சுவர் மீது மோதி கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்த திருவண்ணாமலையைச் சேர்ந்த சுந்தரவடிவேல் (48), முருகன் (43), ஆறுமுகம் (52), ரவிச்சந்திரன் (55) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மேலும் 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு உடனடியாக கோயிலில் உள்ள மருத்துவ மையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டது. பின் படுகாயமடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
