இரட்டை இலை சின்னத்தை எடப்பாடியிடம் இருந்து பறிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்தில் புதிய மனு

புதுடெல்லி: அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகியவை தொடர்பான வழக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மற்றும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிசாமி ஆகியோர் தலைமை தேர்தல் ஆணையத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளனர். அதில்,எங்களை உண்மையான அதிமுக கட்சி என அங்கீகாரித்து, அதிமுக சின்னமான இரட்டை இலையை தங்களுக்கு ஒதுக்க வேண்டும். அதாவது தேர்தல் ஆணையத்தின் பத்தி 15ல் உள்ள, தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு மற்றும் பகிர்வு விதிகள் 1961 கீழ் இந்த மனுவை தாக்கல் செய்கிறோம்.

குறிப்பாக அதிமுக கட்சியில் தற்போது இருக்கும் கட்சி விதிகள் என்பது எடப்பாடி பழனிச்சாமி என்ற தனி மனிதருக்காக கொண்டு வரப்பட்ட திருத்தங்கள் ஆகும். அவை கட்சி நிறுவனரின் நோக்கத்திற்கு எதிரானது ஆகும். எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு தான், உறுப்பினர் சேர்க்கை அறிவிக்கப்பட்டது. இதில் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக கட்சிக்கு பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் அளித்த மொத்த வாக்குகள், கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கையில் பாதி கூட கிடையாது.

தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரால் ஏற்படுத்தப்பட்ட கட்சி விதிகளுக்கு முரணாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதிமுக நிறுவனர் விதிகளை பின்பற்றும் அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் வசம் அதிமுக கட்சி மற்றும் சின்னம் இரட்டை இலையை ஒப்படைக்க வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் அதிமுக கட்சி பெயரை பயன்படுத்தவும், சின்னத்தை பயன்படுத்தவும் தடை விதிக்க வேண்டும். மனுதாரர்களுக்கு நிறுவனரின் கட்சி விதிகள் படி உறுப்பினர் புதுப்பித்தல் மற்றும் சேர்க்கை நடத்தவும் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்தவும் அனுமதி அளிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: