இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், உலகப் புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சாளருமான வாசிம் அக்ரம், ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பர குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் மீது பாகிஸ்தான் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் அனைத்து விதமான சூதாட்டமும் தடை செய்யப்பட்டு உள்ளது. அப்படி இருந்தும் வாசிம் அக்ரம் எவ்வாறு இதை செய்தார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த விவகாரம் பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
முகமது ஃபியாஸ் என்பவர், பாகிஸ்தானின் தேசிய சைபர் கிரைம் புலனாய்வு ஏஜென்சியிடம் வாசிம் அக்ரம் மீது இந்த புகாரை அளித்துள்ளார். அந்தப் புகாரில், ”பாஜி”என்ற வெளிநாட்டு ஆன்லைன் சூதாட்ட செயலியை வாசிம் அக்ரம் விளம்பரப்படுத்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு ஆதாரமாக, வாசிம் அக்ரம் இடம்பெற்றுள்ள விளம்பர போஸ்டர் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தானின் மின்னணு குற்றங்கள் சட்டம் 2016-இன் கீழ், இது ஒரு சட்டவிரோதச் செயல் என்பதால், வாசிம் அக்ரம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார்தாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த புகார் குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ”வாசிம் அக்ரம் ஒரு வெளிநாட்டு சூதாட்ட செயலியின் விளம்பர தூதராக இருப்பதாக புகார் வந்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதி அளித்துள்ளார். ஆனால் வாசிம் அக்ரம், இந்த குற்றச்சாட்டு குறித்து இதுவரை எந்தவிதமான விளக்கத்தையும் அளிக்கவில்லை. இதே ஆன்லைன் சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்தியதாக பிரபல யூடியூபர் சாத்-உர்-ரெஹ்மான் கடந்தசனிக்கிழமை கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் வாசிம் அக்ரமும் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.
