‘நோயாளி இல்லாமல் வந்தால் ஓட்டுபவர் பேஷண்டாக மாறுவார்’ ஆம்புலன்ஸ் டிரைவருக்கு எடப்பாடி மிரட்டல்

* வேலூர் அருகே பிரசார கூட்டத்தில் பரபரப்பு
* சட்டையை பிடித்து அதிமுகவினர் இழுத்ததாக டிரைவர் குற்றச்சாட்டு

வேலூர்: வேலூர் அருகே நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல சென்ற ஆம்புலன்ஸ் அதிமுக பிரசார கூட்டத்தில் நுழைந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த எடப்பாடி பழனிசாமி, ‘நோயாளி இல்லாமல் வந்தால் ஓட்டுபவர் பேஷண்டாக மாறுவார்’ என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார். மேலும் அதிமுகவினர் தனது சட்டை மற்றும் ஐடி கார்டை பிடித்து இழுத்து மிரட்டினர் என்று ஆம்புலன்ஸ் டிரைவர் குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வேலூர் புறநகர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் நேற்று முன்தினம் இரவு பிரசாரம் மேற்கொண்டார். இரவு 10.15 மணியளவில் எடப்பாடி பேசியபோது அவ்வழியாக ஒரு ஆம்புலன்ஸ் வந்தது.

இதைப்பார்த்ததும் டென்ஷன் ஆன எடப்பாடி பழனிசாமி, இதுவரை 30 கூட்டத்தில் பேசியுள்ளேன். 30 கூட்டத்திலும் ஆம்புலன்ஸ் வந்தது. நோயாளியே இல்லாத ஆம்புலன்ஸ் திட்டமிட்டே வருகிறது. அதற்கு வழி விடாதீர்கள் என்றார். மேலும் அடுத்த முறை நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ் கூட்டத்திற்கு நடுவே வந்தால், ஆம்புலன்ஸை ஓட்டி வருபவர் பேஷண்டாக மாறிவிடுவார் என்று டிரைவருக்கு மிரட்டல் விடுத்தார். இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார், அணைக்கட்டு பொதுமருத்துவமனையில் இருந்த ஆம்புலன்ஸ், நோயாளியை ஏற்றிச்செல்வதற்காக வெளியே சென்றிருந்தது.

இந்நிலையில், அங்கு சந்திரா என்ற மூதாட்டியை வேலூர் அடுக்கம்பாறைஅரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க, பள்ளிகொண்டாவில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்க, டிரைவர் சுரேந்தருக்கு அழைப்பு வந்துள்ளது. அவரும் 10 மணிக்கு மேல் ஆகிவிட்டதால் கட்சி கூட்டம் முடிந்திருக்கும் என்று அவ்வழியாக சென்றுள்ளார். அப்போதுதான் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மிரட்டியுள்ளார். இதையடுத்து அங்கிருந்து சென்ற ஆம்புலன்ஸ் மருத்துவமனையில் இருந்த மூதாட்டியை மேல் சிகிச்சைக்காக இரவு 11.35 மணிக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார் என்றனர்.

இதுகுறித்து ஆம்புலன்ஸ் டிரைவர் சுரேந்தர் கூறியதாவது: நான் 108 ஆம்புலன்சில் பைலட் ஆக வேலை செய்கிறேன். இரவு 9.46மணியளவில் அணைக்கட்டில் மருத்துவமனையில் இருந்து அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு செல்ல 108 ஆம்புலன்ஸ் மொபைலுக்கு கால் செய்தனர். இதையடுத்த ஆம்புலன்சை கொண்டு சென்றேன். அப்போது கந்தனேரி அருகே மீட்டிங் சென்றவர்கள் வந்து கொண்டிருந்தனர். அவர்களிடம் மீட்டிங் முடிந்ததா? என்று கேட்டேன். மீட்டிங் முடிந்தது எல்லாரும் அந்த வழியாக வருகிறார்கள், அவ்வழியாக செல்லவேண்டாம் என்றனர். அதனால் அணைக்கட்டு புது போலீஸ் ஸ்டேஷன் வழியாக சென்றபோது, மீட்டிங் முடியவில்லை என்றனர். அங்கிருந்து யூ டேர்ன் போட்டு சென்று 10 நிமிடம் நின்றிருந்தேன்.

அப்போதும் மீட்டிங் முடியாததால், வேறு வழியின்றி மக்கள் உள்ள பாதை வழியாக சென்றேன். மக்கள் வழிவிட்டனர். எடப்பாடி பிரசார வாகனத்தின் அருகே சென்றபோது, அங்கிருந்தவர்கள் சூழ்ந்து மிரட்டினர். பின்னர் என்னையும், இஎம்டியையும் வண்டியில் இருக்கும்போதே சட்டையை பிடித்து இழுத்தனர். இதில் ஐடிகார்டு பிஞ்சுபோய் எங்கு விழுந்தது என்று தெரியவில்லை. ஆம்புலன்ஸ் மொபைல் எல்லாம் பிடுங்கிக்கொண்டனர். போலீசார் தடுத்து மருத்துவமனை வரை பாதுகாப்பாக வந்துவிட்டனர். நாங்கள் 24 மணி நேரமும் ஆம்புலன்சில் மக்களுக்காக சேவை செய்கிறோம். வேண்டுமென்றே மீட்டிங் நடக்கும் பகுதிக்கு செல்லவில்லை. போக வேண்டிய சூழ்நிலையால் சென்றோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: