வாக்கு திருட்டு விவகாரம் குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம்: மக்களவையில் அமளி; மாநிலங்களவையில் வெளிநடப்பு

புதுடெல்லி: பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்கு திருட்டு விவகாரத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்றும் கடும் அமளி ஏற்பட்டது. மாநிலங்களவை காலையில் கூடியதும், பீகார் விவகாரம் உட்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் வழங்கிய 19 ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்கள் நிராகரிக்கப்பட்டன. இதனால் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியதும் அமளிக்கு நடுவே இந்திய துறைமுக மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது, அவையின் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பீகார் விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த வலியுறுத்தினார். இதை ஏற்க மறுத்ததால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதே போல, மக்களவை காலையில் கூடியதும், பீகார் விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பிற்பகல் 2 மணிக்கு அவை தொடங்கியதும், இந்திய விண்வெளி வீரர் சுபான்சு சுக்லாவின் விண்வெளி பயணம் குறித்த சிறப்பு விவாதம் நடந்தது.

‘சர்வதேச விண்வெளி நிலையத்தில் இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் – 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவின் விண்வெளி திட்டத்தின் முக்கிய பங்கு’ என்ற விவாதத்தை ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார். அப்போதும் அமளி செய்த எதிர்க்கட்சிகள் விவாதத்தில் பங்கேற்க மறுத்தன. இதனால், விவாதம் இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டு, நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியிலும் மாநிலங்களவையில் பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: