விசிக சாலை மறியல்

வடலூர், ஆக. 19: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி நேற்று முன்தினம் தனது பிறந்த நாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பல்வேறு இடங்களில் பேனர்கள் வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கி பிறந்தநாள் விழாவை கொண்டாடினர். இந்நிலையில் குறிஞ்சிப்பாடி பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பேருந்து நிலையம் அருகில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்த பேனர்களை காவல்துறையினர் நேற்று முன்தினம் இரவு அகற்றினர். இதனை அறிந்த அப்பகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் குறிஞ்சிப்பாடி நகர செயலாளர் பாலமுருகன் தலைமையில் நேற்று குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகே கடலூர்- விருத்தாசலம் செல்லும் சாலையில் அமர்ந்து காவல்துறையினரை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து நெய்வேலி டிஎஸ்பி ராதாகிருஷ்ணன், குறிஞ்சிப்பாடி இன்ஸ்பெக்டர் மோகன அய்யர் மற்றும் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் இப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் இதுகுறித்து குறிஞ்சிப்பாடி விஏஓ கொடுத்த புகாரின்பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் மறியலில் ஈடுபட்ட 65 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

Related Stories: