தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய செமிகண்டக்டர் ஆலை குஜராத்துக்கு மாற்றம்: ஒன்றிய அரசு மீது காங். குற்றச்சாட்டு

புதுடெல்லி: நாட்டில் 4 செமிகண்டக்டர் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு அனுமதிஅளித்துள்ளது. இந்நிலையில் இந்த திட்டங்களை ஒதுக்கீடு செய்வதில் அரசு பாரபட்சமாக செயல்படுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில்,‘‘விரிவான செயல்திட்டத்திற்கு பின் ஒரு முன்னணி தனியார் நிறுவனம் தெலங்கானாவில் செமிகண்டக்டர் திட்டத்திற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்து இருந்தது.

ஆந்திராவிற்கு இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ் இதனை அரசு அங்கீகரித்தது. மிகவும் முன்னதாகவே இதுபோன்ற இடமாற்றம் கட்டாயப்படுத்தப்பட்டது. இரண்டு குறைக்கடத்தி உற்பத்தி திட்டங்கள் அவற்றின் முன்மொழியப்பட்ட இடத்தை தெலங்கானாவில் இருந்து குஜராத்திற்கு மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதேபோல் தமிழ்நாட்டிற்காக திட்டமிடப்பட்ட மற்றொரு தொழிற்சாலையும் குஜராத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் ஒப்புதல் பெற்றது. இந்தியாவை வலிமையாக்கும் மாநிலங்களுக்கு இடையிலான போட்டியை பற்றி பிரதமர் பேசுகிறார். ஆனால் மிகவும் வெளிப்படையாக ஒரு சார்புடையவராக இருந்தால் போட்டி ஒரு கேலிக்கூத்தாக மாறும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: