நிலக்கோட்டை, ஆக. 13: கொடைரோடு அருகே கட்டகூத்தன்பட்டியை சேர்ந்தவர் பொன்னையன் (76). விவசாயி. இவரது தம்பி சங்கன் (74). ஓய்வு ராணுவ வீரர். இவர்களுக்கு அதே பகுதியில் பூர்வீக சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. இதில், பொன்னையன் தனக்குரிய பகுதியை சங்கனுக்கு தெரியாமல் இளையராஜா என்பவருக்கு விற்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நேற்று காலை சங்கன் தனது அண்ணனை சந்தித்து கேட்டுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சங்கன் வீட்டுக்கு சென்று அரிவாளை எடுத்து வந்து பொன்னையனை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் ஜிஹெச்சிற்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிந்து சங்கனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
