தா.பழூர், ஆக.13: அரியலூர் மாவட்டம் தா.பழூர் திதி தோஷ பரிகார ஸ்தலமான விஸ்வநாதர் சிவன் கோயிலில் கடந்த மாதம் 7ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு தினமும் மண்டலாபிஷேகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பலரும் சிவபெருமானுக்கு வழிபாடு செய்ய தங்களுக்கு வாய்ப்புகள் கேட்டு வாங்கி சிவனுக்கு வரிசை எடுத்து வந்து அபிஷேகம் செய்து செய்து வருகின்றனர்.
அதன்படி, 35 நாள் மண்டலபிஷேகத்தை தா.பழூர் அருகே உள்ள சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு சிவனுக்கு சேவை செய்ய ஒரு வாய்ப்பு தாருங்கள் என கேட்டுக் கொண்டனர். இதில் சிந்தாமணி கிராம பொதுமக்களுக்கு 35ம் நாள் மண்டலாபிஷேகம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
அப்போது, ஊர் பொதுமக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் தா.பழூர் விஸ்வநாதருக்கு வழிபாடு செய்ய புடவை, வேஷ்டி, பழங்கள், பூ, அன்னதானம், அபிஷேக சாமான்கள் உள்ளிட்டவைகளை சிந்தாமணி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் இருந்து மேளதாளம் முழங்க வான வேடிக்கையுடன் தா.பழூர் கடைவீதி வழியாக கோவிலுக்கு எடுத்து வந்தனர். பின்னர், சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் மலர் அலங்காரத்தில் சுவாமி அம்பாள் காட்சி அளித்தார். அப்போது, மங்கள இசையுடன் மகா தீபாராதனை காட்டப்பட்டது.
