முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்; வீரர்கள் 16ம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு

சென்னை: முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்கள் 16ம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை பெரும்பாக்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் தொகுதி மேம்பாட்டு நிதி உள்பட ரூ.3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கலைஞர் கலையரங்கத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது:2016ல் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 16 மாணவிகளோட தொடங்கப்பட்ட இந்த கல்லூரியில் இன்றைக்கு கிட்டத்தட்ட 1,300 பேர் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பாக முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை ஒவ்வொரு வருடமும் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

ஆகவே, இங்கே ஆர்வமுள்ள விளையாட்டு வீரர்கள், SDAT இணையத்தளத்துல வருகிற 16ம் தேதிக்குள்ள முன் பதிவு செய்து கொள்ளுங்கள். உங்களோட கல்வித்திறமையையும், பன்முகத்திறமையையும் தொடர்ந்து வளர்த்துக்கொண்டே இருங்கள். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், எம்பி பி.வில்சன், எம்எல்ஏக்கள் எஸ்.அரவிந்த் ரமேஷ், ஏ.எம்.வி.பிரபாகரராஜா, உயர்கல்வித்துறை செயலாளர் சங்கர், கல்லூரி கல்வி ஆணையர் சுந்தரவல்லி, மாவட்ட கலெக்டர் சினேகா, பெரும்பாக்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் உமா மகேஸ்வரி, அரசு உயர் அலுவலர்கள், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரியின் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: