புளியங்குடியில் விவசாய வேலைக்கு சென்ற பெண்களை தாக்கிய கரடியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை ஏற்பாடு

புளியங்குடி, ஆக.11: புளியங்குடியில் விவசாய வேலைக்கு சென்ற பெண்களை தாக்கிய கரடியை உயிரோடு பிடிக்க வனத்துறையினர் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். புளியங்குடி அருகே மலையடிவாரத்தில் மனக்கடையார் செல்லும் வழியில் கல்துண்டு ஆறு உள்ளது. அதன் கீழ்புறத்தில் இசக்கி, பீர்முகமது ஆகியோருக்கு சொந்தமான எலுமிச்சை தோட்டம் உள்ளது. இங்கு எலுமிச்சை பழங்களை பறிப்பதற்காக கடந்த 7ம்தேதி காலை 6 மணிக்கு 10க்கும் மேற்பட்டோர் சென்றனர். அப்போது திடீரென தோட்டத்தில் இருந்து வெளியேறிய 2கரடிகள் குட்டிகளோடு அவர்களை துரத்தியது. இதையடுத்து அனைவரும் பதறியடித்து ஓடினர்.கரடிகள் கடித்ததில் புளியங்குடியைச் சேர்ந்த ஷேக் மனைவி சேகம்மாள்(52), காலாடி தெரு ராமர் மனைவி ராமலெட்சுமி(46), காலாடி வடக்கு தெரு இசக்கி மனைவி அம்பிகா(40) ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.

இதில் பலத்த காயமடைந்த சேகம்மாள் நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதுபோல் பலத்த காயமடைந்த ராமலெட்சுமி, அம்பிகாவுக்கு புளியங்குடி அரசு மருத்துவமனையிலும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புளியங்குடி பகுதிகளில் யானை, காட்டுபன்றி, காட்டுமாடுகள் விவசாயிகளை தாக்கிய நிலையில் தற்போது கரடிகளும் விளைநிலங்களுக்கு புகுந்து தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.மாவட்ட வன அலுவலர் அகில்தம்பி உத்தரவின் பேரில் புளியங்குடி வன அலுவலர் ஆறுமுகம் தலைமையில் பல்வேறு பிரிவினர் அமைந்த சுமார் 40பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. கரடி நடமாட்டத்தை கண்காணிக்க காட்டின் பல்வேறு இடங்களில் நவீன தெர்மல் கேமரா அமைக்கப்பட்டுள்ளது. இது இரவிலும் வனவிலங்குகளின் நடமாட்டத்தை துல்லியமாக பதிவு செய்யும். மேலும் நவீன டிரோன் மூலமாக கரடிகள் நடமாட்டத்தை ஆய்வு செய்து முக்கிய இடங்களில் பலாப்பழங்களை வைத்து பிடிக்க முயற்சி செய்து வருகின்றனர்.

புளியங்குடி வன அலுவலர் ஆறுமுகம் கூறுகையில், பகல், இரவிலும் நவீன தெர்மல் டிரோன் கேமரா மூலமாக கரடிகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம். இதில் ஒரு குட்டி, பெரிய கரடி இருப்பது தெரிய வந்துள்ளது. உணவுக்காக இடம் பெயர்ந்து வந்துள்ளது. அதன் நடமாட்டத்தை கண்காணித்து அதற்கேற்ப கூண்டுகளை இடமாற்றி வருகிறோம். விரைவில் கரடிகளை பிடித்து வனப்பகுதியில் கொண்டு விடப்படும். அதுவரை அதிகாலையில் விவசாய வேலைகளுக்கு செல்பவர்கள் கவனத்துடன் செல்ல வேண்டும் என்றார்.

Related Stories: