பொன்னமராவதி, ஆக. 9: பொன்னமராவதியில் அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பொன்னமராவதி ஒன்றிய 17வது ஒன்றிய மாநாடு நடந்தது. ஒன்றிய தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஜனார்த்தனன் துவக்க உரையாற்றினார்.
ஒன்றிய செயலாளர் சரவணன் வேலை அறிக்கை வைத்து பேசினார்.விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் ராமசாமி, மாதர் சங்க ஒன்றிய செயலாளர் மதியரசி, சிஐடியு தீன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர். மாவட்டச் செயலாளர் மகாதீர் புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து நிறைவுறையாற்றினார். புதிய தலைவராக சரவணன், செயலாளராக விஜயராகவன், பொருளாளராக ராஜ்குமார் உள்ளிட்ட 11 பேர் கொண்ட ஒன்றிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பொன்னமராவதியில் அனைத்து மகளிர் காவல் நிலையம், அரசு கல்லூரி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு தொழிற்பேட்டை ஆகியவை துவங்க வேண்டும். பொன்னமராவதி பகுதிகளில் கஞ்சா, லாட்டரி சீட்டு விற்பனைகளை தடுக்க வேண்டும். பொன்னமராவதி நகர் பகுதியில் இருந்து அரசு மதுபான கடையை அப்புறப்படுத்த வேண்டும்.
பொன்னமராவதி தாலுகாவில் குடிமனை பட்டா இல்லாதவர்களுக்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும் பொன்னமராவதி அண்ணா சாலையில் முழுமையான அளவில் ஆக்கிரமிப்புகளை அகற்றி ஒரு வழி பாதையாக ஆக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
