ஜெயங்கொண்டம், ஆக.8: ஜெயங்கொண்டத்தில் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு வாரியங்காவலில் நடைபெற்ற முகாமில் 52 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்துள்ள வாரியங்காவல் கிராமத்தில் கைத்தறித்துறை கும்பகோணம் சரகம் சார்பில் 11வது தேசிய கைத்தறி தின விழா கொண்டாடப்பட்டது.
இதில் நெசவாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம், கைத்தறித்துறை கண்காட்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கைத்தறித்துறை உதவி இயக்குனர் ரமேஷ் தலைமை வகித்தார். கைத்தறி நிர்வாக அலுவலர் மகாலட்சுமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கிரேஸ் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இம் முகாமில் 13 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை ஆணைகள் வழங்கப்பட்டது, முத்ரா கடன் திட்டத்தின்கீழ் ரூ.16 லட்சத்திற்கான ஆணைகள் 32 நபர்களுக்கு வழங்கப்பட்டது, மேலும் தமிழக அரசு கைத்தறி துறை ஆதரவு திட்டத்தின் கீழ் 20 நபர்களுக்கு ரூ.76 ஆயிரம் மதிப்பில் அச்சு பண்ணைக்கான பொருட்கள் வழங்கப்பட்டது. கைத்தறி ஆய்வாளர் முத்துக்குமார் நன்றி கூறினார். இதில் ஜெயங்கொண்டம் வட்டாரத்திற்கு உட்பட்ட கைத்தறி நெசவாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
