குரும்பூர் பஜாரில் அபாய மின்கம்பம்

உடன்குடி,ஆக.7: குரும்பூர் மெயின் பஜாரில் சேதமடைந்து அபாய நிலையில் உள்ள மின்கம்பத்தை விரைவில் மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏராளமான குக்கிராமங்களை உள்ளடக்கிய, விவசாய பெருமக்களை கொண்ட பகுதி குரும்பூர். குரும்பூரிலிருந்து ஏரல் செல்ல பேருந்து ஏறுவதற்காக சாலையோரம் தான் பொதுமக்கள் காத்திருக்க வேண்டி உள்ளது. அப்பகுதியையொட்டி ஏராளமான கடைகள், தனியார் நிதிநிறுவனம், எதிரே ஸ்டேட் பாங்க் என மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் நிறுவனங்களும் அடுத்தடுத்து அமைந்துள்ளன.

இவ்வாறு எப்போது போக்குவரத்துக்கு பஞ்சமிராத மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படும் மெயின் பஜாரில் அமைக்கப்பட்டிருந்த மின்கம்பமானது பராமரிப்பின்றி பாழானதோடு தற்போது மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. மின்கம்பத்தின் அடிப்பகுதி மற்றும் பெரும்பாலான பகுதிகளில் கான்கீரிட் பூச்சுக்கள் பெயர்ந்துள்ளதால் அதன் உள்ளேயுள்ள இரும்புக்கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டிருக்கின்றன. தற்போது ஆடி காற்று பலமாக வீசிவருவதால் மின்கம்பம் எந்நேரத்திலும் கீழே விழுந்து அசம்பாவிதம் ஏற்படும் அபாயமும் நிலவுகிறது. எனவே இதுவிஷயத்தில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து ஆபத்தான மின்கம்பத்தை விரைவில் மாற்றி அமைக்க முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: