துங்கபுரம் நூலகத்தில் அடிப்படை வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்

குன்னம், ஆக.5: துங்கபுரம் நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் துங்கபுரத்தில் பஸ் நிலையம் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே நூலகம் அமைந்துள்ளது. மேலும் துங்கபுரம், கோவில்பாளையம், தேனூர், கிளியப்பட்டு பகுதி மக்கள் மற்றும் கல்லூரி பள்ளி மாணவ, மாணவிகள் அன்றாடம் செய்தித்தாள்களை படிப்பதற்கும் தங்கள் படிப்பு சார்ந்த புத்தகங்களை பார்ப்பதற்கும் படிப்பதற்கும் நூலகம் சென்று வருகின்றனர். இந்த நூலகம் சாலையில் இருந்து இரண்டடிக்கு கீழே உள்ளது. இதனால் மழைக்காலங்களில் மழை நீர் நூலகத்திற்குள் சென்று அங்குள்ள புத்தகம் மற்றும் செய்தித்தாள்களை நனைத்து வீணாக்கி விடுகிறது. மேலும் நூலகத்தில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லை என்று கூறப்படுகிறது. அமர்ந்து படிக்கக்கூடிய வசதியும் இல்லை. ஒரு பெஞ்ச் மற்றும் ஒரு டேபிள் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் துங்கபுரம் நூலக கட்டிடத்தை சீரமைத்து இரண்டு மாடி கட்டிடமாக அனைத்து வசதிகளுடன் கட்டித் தர வேண்டும் என்று பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: