பெரம்பலூர், டிச.20: இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை பெரம்பலூர் மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்டக் கலெக்டருமான மிருணாளினி நேற்று வெளியிட்டார்.பின்னர் மாவட்டக் கலெக்டர் தெரிவித்ததாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026ன் ஒரு பகுதியான வாக்காளர் கணக்கெடுப்பு பணிக்காக கடந்த அக்27 வரை பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதி, குன்னம் சட்டமன்ற தொகுதி ஆகியவற்றில் இடம் பெற்றிருந்த 5,90,490 வாக்காளர்களுக்கும் 100 சதவீதம் கணக்கீட்டுப் படிவங்களை வழங்கி கணக்கெடுப்பு செய்யப்பட்டது.
கணக்கெடுப்புப் பணி கடந்த 14ம் தேதி நிறைவடைந்தது. இந்தப்பணியில் 105 சிறப்பு அலுவலர்களும், 652 வாக்குச் சாவடி நிலை அலுவலர்களும் (BLO), அங்கீகரிக்கப்பட்ட அரசியல்கட்சிகளால் நியமனம் செய்யப்பட்ட 2,277 வாக்குச்சாவடி நிலை முகவர்களும் (BLA-2) மற்றும் இல்லம் தேடிக்கல்வி குழுவினர், மகளிர் சுய உதவிக்குழுவினர், ஊராட்சிகளின் கணினி இயக்குபவர்கள் என 783 தன்னார்வலர்களும் ஈடுபடுத்தப்பட்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் எஸ்ஐஆர் 2026-இன் கணக்கெடுப்பு மற்றும் வாக்குச் சாவடிகளின் மறுசீரமைப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்து புதிய வாக்குச்சாவடிகள் வாரியாக வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் உள்ள 387 வாக்குச்சாவடிகளில் மொத்தம் 2,80,566 வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் 1,36,304 ஆண் வாக்காளர்களும் 1,44,235 பெண் வாக்காளர்களும், 27 மூன்றாம் பாலின வாக்காளர்கள் உள்ளனர். இதில் இறந்துபோன வாக்காளர்கள் 12,965 பேர், இன்னாரென்று அறிய இயலாத வாக்காளர்கள் 4,340 பேர், நிரந்தரமாக வெளியேறிவர்கள் 10,329 பேர், இரட்டைப்பதிவுள்ள வாக்காளர்கள் 1,725 பேர், மற்றவர்கள் 17 பேர் என மொத்தம் 29,376 வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.மேலும் குன்னம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 345 வாக்குச்சாவடிகளில் மொத்தம் 2,60,376 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1,28,817 ஆண் வாக்காளர்களும் 1,31,556 பெண் வாக்காளர்களும், 3 மூன்றாம் பாலின வாக்காளர்கள் உள்ளனர். இதில் இறந்து போன வாக்காளர்கள் 9,995 பேர், இன்னாரென்று அறிய இயலாத வாக்காளர்கள் 636 பேர், நிரந்தரமாக வெளியேறிவர்கள் 7,732பேர், இரட்டைப்பதிவுள்ள வாக்காளர்கள் 1,801 பேர், மற்றவர்கள் 8 பேர் என மொத்தம் 20,172 வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
2 சட்டமன்ற தொகுதிகளையும் சேர்த்து இறந்துபோன வாக்காளர்கள் 22,960 பேர், இன்னாரென்று அறிய இயலாத வாக்காளர்கள் 4,976 பேர், நிரந்தரமாக வெளியேறிவர்கள் 18,061 பேர், இரட்டைப்பதிவுள்ள வாக்காளர்கள் 3,526 பேர்,
மற்றவர்கள் 25 பேர் என மொத்தம் 49,548 வாக்காளர்கள் நீக்கப்பட்டள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 5,40,942 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2,65,121 ஆண் வாக்காளர்களும் 2,75,791 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 30 பேர்களும் உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.இந்த வரைவு வாக்காளர் பட்டியலிலும் ஆண் வாக்காளர்களை விட 10,670 பெண் வாக்களர்கள் அதிகம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், வாக்காளர் பதிவு அலுவலர்கள் சக்திவேல், அனிதா, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதி நிதிகள் மற்றும் அனைத்து தாசில்தார்கள் கலந்து கொண்டனர்.பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 5,40,942 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2,65,121 ஆண் வாக்காளர்களும் 2,75,791 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலின வாக்காளர்கள் 30 பேர்களும் உள்ளனர். இந்த வரைவு வாக்காளர் பட்டியலிலும் ஆண் வாக்காளர்களை விட 10,670 பெண் வாக்களர்கள் அதிகம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
