பெரம்பலூர்,டிச.16: குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மனநலம் காத்தல் மற்றும் மது போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சியை மாவட்ட கலெக்டர் மிருணாளினி தொடங்கி வைத்தார். பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு மனநலம் காத்தல் மற்றும் மது ஒழிப்பு போதை, குறித்த விழிப்புணர்வு பயிற்சி நேற்று (15ம்தேதி) திங்கட்கிழமை நடைபெற்றது.
இந்தப் பயிற்சியை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் மிருணாளினி தொடங்கி வைத்துப் பேசியதாவது:
மனநலம் என்பது ஒட்டு மொத்த ஆரோக்கியத்தின் ஒரு அடிப்படை அங்கமாகும். வேகமாக மாறிவரும் இன்றைய உலகில், வாழ்வாதார சவால்கள், மன அழுத்தம், குடும்பப் பொறுப்புகள், சமூக மாற்றங்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றால் மக்கள் மன அழுத்தத்தை எதிர் கொள்கின்றனர். இந்த அழுத்தங்கள் குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் மற்றும் முதியவர்கள் என அனைத்து வயதினரையும் பாதிக்கின்றன.
இந்தத் திட்டம் மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறை, சமூக நலத்துறை, கல்வித்துறை மற்றும் பிறதுறைகள் இணைந்து, மனநலப் பிரச்சினைக்கு சிகிச்சை மட்டுமல்லாமல், தடுப்பு, விழிப்புணர்வு ஏற்படுத்தம் பணிகளையும் மேற்கொள்கின்றது. ஆண்கள், பெண்கள், இளம் பருவத்தினர், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினர் போன்ற பாதிக்கப் படக்கூடிய குழுக்களுக்கு இந்த திட்டம் சிறப்பு கவனம் செலுத்தும்.உடல்நலம் பற்றிப் பேசுவது போலவே, மனநலம் குறித்தும் அனைவரும் வெளிப்படையாகப் பேச வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
உதவி தேடுவது பலவீனத்தின் அடையாளம் அல்ல, அது விழிப்புணர்வு மற்றும் வலிமையின் அடையாளம். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டில் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றுவதையே முக்கிய இலக்காக கொண்டு, போதைப்பொருட்களை ஒழித்து, நமது சமூகத்தையும், குறிப்பாக நமது இளைஞர்களையும் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
மாவட்ட நிர்வாகம், காவல் துறைத்யுடன் போதைப் பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத போதைப் பொருட்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், தடைசெய்யப் பட்ட பொருட்களை விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. எங்கேனும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்வது குறித்து தகவல் அறிந்தால் உடனே எங்கள் கவனத்திற்கு கொண்டு வாருங்கள். சட்டத்தால் மட்டுமே போதைப்பொருள் பிரச்சனையை தீர்க்க முடியாது. சமூகப் பங்கேற்பு ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது.
பெற்றோர்கள், ஆசிரியர்கள், சுயஉதவிக் குழுக்கள், இளைஞர் குழுக்கள், மதத் தலைவர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் எனத்தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில்,தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர், கோபாலகிருஷ்ணன், உதவி திட்ட இயக்குநர் பெர்லினா, கல்லூரி முதல்வர் கீத பிரியா மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
