கடந்த 35 ஆண்டுகளில் 42 எம்பிக்கள் பதவி பறிப்பு: 14வது மக்களவையில் அதிகபட்சம்

புதுடெல்லி: கடந்த 35 ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் 42 எம்பிக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக 14வது மக்களவையில் 19 பேரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை பெற்றதன் மூலம் எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, எம்பிக்கள் தகுதி நீக்க விவகாரம் பேசுபொருளாகி உள்ளது. இதுவரை எம்பிபதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டவர்கள் பற்றிய தொகுப்பு இதோ… நாடாளுமன்றம் அல்லது சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தானாக முன்வந்து தனது கட்சியிலிருந்து விலகினால், அவர் தனது பதவியை இழப்பார்.

எனவே தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு கட்சி தாவுவதை தடுக்க, கடந்த 1985ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி ஆட்சியில் கட்சித் தாவல் தடை சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் கொண்டு வந்த பின் முதல் முறையாக 1988ம் ஆண்டு காங்கிரஸ் எம்பி லால்துஹோமா தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இவர் மிசோரம் சட்டப்பேரவை தேர்தலில், தனது தலைமையில் உருவாக்கப்பட்ட மிசோ நேஷனல் யூனியன் கட்சி வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார். இதற்காக கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் அவரது மக்களவை எம்பி பதவி பறிக்கப்பட்டது. கட்சித் தாவல் தவிர, கிரிமினல் வழக்குகளில் 2 ஆண்டுக்கு மேல் தண்டனை பெறுபவர்கள் பதவி நீக்கம் செய்யப்படுகின்றனர்.

ஆதாயம் தரும் இரட்டை பதவி வகிப்பவர்கள், மோசமான நடத்தை, பணமோசடி மற்றும் கட்சி உத்தரவை மீறி எதிர்தரப்புக்கு வாக்களித்தல் போன்ற காரணங்களுக்காகவும் எம்பிக்களை தகுதி நீக்கம் செய்ய முடியும்.  அந்த வகையில், மோடி குடும்பப் பெயர் தொடர்பாக அவதூறாக பேசியதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்ததை தொடர்ந்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதே போல கொலை வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட லட்சத்தீவின் தேசியவாத காங்கிரஸ் எம்பி முகமது பைசலின் பதவி பறிக்கப்பட்டது. இதே போல, பகுஜன் சமாஜ் கட்சி எம்பி அப்சல் அன்சாரி 4 ஆண்டு சிறை தண்டனைக்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

ஜனதா தள தலைவர் வி.பி.சிங் தலைமையிலான ஒன்பதாவது மக்களவையில், கட்சித் தாவல் தடை சட்டத்தை மீறியதற்காக 9 எம்பிக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். வரலாற்றிலேயே அதிகபட்சமாக 14வது மக்களவையில்தான்(2004 முதல் 2009 வரை) அதிகபட்சமாக 19 எம்பிக்கள் பதவி பறிக்கப்பட்டது. இதில், 10 எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்காக லஞ்சம் வாங்கியதற்காகவும், 9 பேர் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எதிர் தரப்புக்கு ஆதரவாக வாக்களித்ததற்காகவும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.  இதன்படி, கடந்த 1988ம் ஆண்டிலிருந்து கடந்த 35 ஆண்டில் 42 எம்பிக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

The post கடந்த 35 ஆண்டுகளில் 42 எம்பிக்கள் பதவி பறிப்பு: 14வது மக்களவையில் அதிகபட்சம் appeared first on Dinakaran.

Related Stories: