15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளிய வழக்கில் 20 ஆண்டு தண்டனை பெற்ற இன்ஸ்பெக்டருக்கு நிபந்தனை ஜாமீன்: உயர் நீதிமன்றம் உத்தரவு

மாதவரம்: சென்னையில் சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளி கொடுமை செய்த வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற இன்ஸ்பெக்டருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வட சென்னையில் 15 வயது சிறுமி பாலியல் தொழிலில் தள்ளப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இதையடுத்து, சிறுமியின் தாய், வண்ணாரப்பேட்டை போலீசில் கொடுத்த புகாரின் பேரில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் உறவினர்கள் 8 பேர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அப்போதைய எண்ணூர் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வினோபாஜி, பாஜ பிரமுகர் ராஜேந்திரன் உள்ளிட்ட 26 பேர் மீது போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம், சிறுமியின் நெருங்கிய உறவினர்கள் 8 பேருக்கு வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கும் வகையிலான ஆயுள் தண்டனையும், அனிதா (எ) கஸ்தூரி, பாஜ பிரமுகர் ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் புகழேந்தி, காமேஷ்வர்ராவ், முகமது அசாருதீன், பசுலுதீன், வினோபாஜி, கிரிதரன், ராஜாசுந்தர், நாகராஜ், பொன்ராஜ், வெங்கட்ராம், சிவில் சப்ளைஸ் அதிகாரி கண்ணன் ஆகிய 13 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த 2022ல் தீர்ப்பளித்தது. இந்த நிலையில், தண்டனையை எதிர்த்து இன்ஸ்பெக்டர் புகழேந்தி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

இன்ஸ்பெக்டர் சார்பில் வழக்கறிஞர் எம்.வேல்முருகன் ஆஜராகி, இன்ஸ்பெக்டரை பாதிக்கப்பட்ட சிறுமி நீதிமன்றத்தில் அடையாளம் காட்டவில்லை என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரரை சிறுமி அடையாளம் காட்டவில்லை. குறுக்கு விசாரணையின்போது மனுதாரரை தெரியுமா என்று நீதிபதி கேட்டபோதுதான் அவரை தெரியும் என்று சிறுமி தெரிவித்துள்ளார். எனவே, மனுதாரரின் மேல்முறையீடு வழக்கில் முடிவு எடுக்கப்படும்வரை மனுதாரரின் தண்டனை நிறுத்திவைக்கப்படுகிறது. ரூ.25 ஆயிரம் மற்றும் அதே தொகைக்கு இரு நபர் உத்தரவாதத்தில் அவருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர் ஒவ்வொரு மாதமும் முதல் வேலை நாளில் காலை 10.30 மணிக்கு சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

The post 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் தள்ளிய வழக்கில் 20 ஆண்டு தண்டனை பெற்ற இன்ஸ்பெக்டருக்கு நிபந்தனை ஜாமீன்: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: