10ம் வகுப்பு பொதுத்தேர்வை 22,516 மாணவர்கள் எழுதினர்

தர்மபுரி, ஏப்.7: தர்மபுரி மாவட்டத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. 22,516 மாணவ, மாணவிகள் நேற்று தேர்வு எழுதினர். 901 பேர் தேர்வு எழுத வரவில்லை. தொடர்ந்து கலெக்டர் தேர்வு அறையில் ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி தொடங்கி, ஏப்ரல்3ம் தேதியுடன் நிறைவடைந்தது. 11ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கி, நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில், நேற்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வுதொடங்கியது. தர்மபுரி மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் 10ம் வகுப்பு பொதுதேர்வு நேற்று தொடங்கியது.

சுமார் 102 மையங்களில் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். 218 அரசுப்பள்ளிகள், 6 அரசு உதவி பெறும் பள்ளிகள், 1 ஆதிதிராவிடர் நலப்பள்ளி, 5 உண்டி, உறைவிட பள்ளி, 1 சமூக நலத்துறையின் பள்ளி, 16 சுய நிதி பள்ளிகள் மற்றும் 85 மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 332 பள்ளிகளை சேர்ந்த 23,751 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பம் செய்திருந்தனர். இதில் 22,516 பேர் தேர்வு எழுதினர். 7 பேருக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது. 901 பேர் தேர்வு எழுத வரவில்லை. காலை 10 மணிக்கு தொடங்கிய தமிழ்தேர்வு மதியம் 1.15 மணிவரை நடந்தது.

காலை 10 மணிக்கு புகைப்படம், பதிவெண், பாடம் முதலான விவரங்கள் கொண்ட முதன்மை விடைத்தாள்கள் மாணவ, மாணவிகளுக்கு தேர்வு அறையில் வழங்கப்பட்டது. மாணவர்கள் விடைத்தாளில் தங்கள் குறிப்புகளை பதிவு செய்ய 5 நிமிடம், கேள்வித்தாள்களை படித்து பார்க்க 10 என மொத்தம் 10 நிமிடம் என மொத்தம் 15 நிமிடம் ஒதுக்கப்பட்டது. பின், 10.15 மணிக்கு வினாத்தாள் வழங்கப்பட்டு, தேர்வு தொடங்கியது. இத்தேர்வுப் பணிகளில் 1965 தேர்வு அறை கண்காணிப்பாளர்களும், 102 முதன்மை கண்காணிப்பாளர்களும், 102 துறை அலுவலர்களும், 102 பறக்கும் படைகளும், 24 வழித்தட அலுவலர்களும், மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உதவிக்காக 263 சொல்வதை எழுதுபவர்களும், 20 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்களும் என மொத்தம் 2476 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்துவரும், 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாணவ, மாணவிகளும் இத்தேர்வினை உண்மையாகவும், நேர்மையாகவும், எவ்வித அச்சமோ, பதற்றமோ இல்லாமல் எளிமையாக, மகிழ்ச்சியுடன் தேர்வு எழுத வேண்டும். இத்தேர்வு பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் இத்தேர்வுகளை சிறப்பாக நடத்தி முடிப்பதற்கு தேவையான அனைத்து பணிகளையும் முழுமையாக மேற்கொள்ள வேண்டும். எவ்வித தவறுகளும் ஏற்படாத வண்ணம் சிறப்பாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் தெரிவித்தார்.

The post 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 22,516 மாணவர்கள் எழுதினர் appeared first on Dinakaran.

Related Stories: