அரியலூரில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் அரியலூர் மாவட்டத்தில் பழத்தோட்டத்தில் பசுந்தீவனம் சாகுபடி விருப்பம் உள்ள விவசாயிகள் விண்ணப்பிக்க வேண்டுகோள்

அரியலூர், ஜூலை 4: அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வெளியிட்ட செய்தி குறிப்பு;
கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் 2024-25ம் ஆண்டிற்கு, பசுந்தீவன உற்பத்தியை அதிகரிக்க, பழத்தோட்டங்களில் பசுந்தீவனப் பயிரை ஊடுபயிராகப் பயிரிடுவதை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ், அரியலூர் மாவட்டத்திற்கு 50 ஏக்கர் இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும், நீர்ப்பாசன வசதியுடன் கூடிய பழத்தோட்டம் மற்றும் கால்நடைகள் வைத்துள்ள விவசாயிகளுக்கு, ஒரு ஏக்கருக்கு ரூ.3000 வீதம், ஒரு ஹெக்டேருக்கு ரூ.7500 வரை அரசால் மானியமாக வழங்கப்படுகிறது. மேலும், குறைந்தது 0.50 ஏக்கர் முதல் அதிகபட்சமாக 1 ஹெக்டேர் நிலப்பரப்பில் தொடர்ந்து பல்லாண்டுகள் பயன்தரும் தீவன பயிர்களை ஊடுபயிராக பயிரிட்டு, குறைந்தது 3 வருட காலம் பராமரிக்க வேண்டும். பசுந்தீவனம் உற்பத்தி செய்ய விருப்பமுள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் மற்றும் பெண் விவசாயிகளுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும்.

எனவே, இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் தென்னை மற்றும் பழத்தோட்டம் உள்ள விவசாயிகள், தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி திட்ட விவரங்களைப் பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உரிய ஆவணங்களுடன் ஜுலை 10க்குள் தொடர்புடைய கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரிடம் சமர்ப்பிக்குமாறு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

The post அரியலூரில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் அரியலூர் மாவட்டத்தில் பழத்தோட்டத்தில் பசுந்தீவனம் சாகுபடி விருப்பம் உள்ள விவசாயிகள் விண்ணப்பிக்க வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: