வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி தாசில்தார் சமரசம்

வந்தவாசி, மார்ச் 18: வீட்டுமனை பட்டா வழங்ககோரி அனைத்திந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் தாலுகா அலுவலகத்தை முற்றையிட முயன்றவர்களிடம் தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தினார். வந்தவாசி நகரில் வசிக்கும் சிறுபான்மை விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள், பிருதூர் மற்றும் சென்னாவரம் கிராமங்களில் வசிக்கும் பழங்குடியினர், காட்டுநாயக்கன் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் அரசின் இலவச வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கலெக்டர், தாசில்தார், ஜமாபந்தி, மனுநீதி நாள் முகாம் போன்ற முகாம்களில் சுமார் 15க்கும் மேற்பட்ட மனுக்கள் அளித்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இதனால், நேற்று வந்தவாசி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர்கள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர். இதற்காக, வந்தவாசி தாலுகா அலுவலகம் முன் நேற்று அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்க மாநில குழு உறுப்பினர் எம்.வெங்கடேசன், மாவட்ட செயலாளர் பிரியா, மாவட்ட பொருளாளர் ரஹமத்துல்லா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கூடினர்.

அப்போது, தாசில்தார் வாசுகி அவர்களை அழைத்து தங்களது கோரிக்கையை ஒரு மாதத்திற்குள் நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். இதையேற்று, அனைவரும் ஆர்ப்பாட்டம் நடத்தாமல் கலைந்து சென்றனர்.

Related Stories: