காரைக்குடி முத்துபட்டணத்தில் கொசு உற்பத்தி கூடமாக மாறிய நகராட்சி டிவிசன் அலுவலகம் பச்சிளம் குழந்தைகள் பாதிக்கும் அபாயம்

காரைக்குடி, பிப். 21: காரைக்குடி முத்துபட்டணம் தாய், சேய் நலமையத்தின் பின்புறம் குப்பை மண்டி கிடப்பதால் கொசு கடிக்கு பச்சிளம் குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காரைக்குடி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் தூய்மை பணியை மேற்கொள்ள வசதியாக இரண்டு டிவிசனாக பிரிக்கப்பட்டுள்ளது. முத்துபட்டணம் மற்றும் செஞ்சை பகுதியில் டிவிசன் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து துப்புரவு பணியாளர்களுக்கு பணிகள் ஒதுக்கப்படும். இதற்கு என தனியாக மேஸ்திரி நியமிக்கப்பட்டு அவர் துப்புரவு பணியாளர்களை கண்காணிப்பார். முத்துபட்டணம் பகுதியில் உள்ள டிவிசன் அலுவலகத்துக்கு உட்பட்டு 1, 2, உள்பட பல்வேறு வார்டுகள் வரும். இவ்அலுவலகம் முன்பு முத்துபட்டணம் பகுதியில் செயல்பட்டு வரும் தாய், சேய் நல விடுதிக்கு பின்புறம் செயல்பட்டது. தற்போது வேறு பகுதிக்கு மாற்றப்பட்டு செயல்படுகிறது. பயனற்று கிடக்கும் பழைய டிவிசன் அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்கள் தெருக்கள், வீடுகளில் சேகரிக்கும் பிளாஸ்டிக் பொருட்கள், டயர், தேங்காய் சிரட்டை மற்றும் பயனற்ற பொருட்களை சேகரிக்கும் மையமாக மாற்றி வருகின்றனர்.

அதிகளவில் பொருட்கள் சேர்ந்த பிறகு அதனை எடைக்கு போடுவார்கள். இதில் வரும் வருமானத்தை டிவிசன் அலுவலகத்தில் பணியாற்றும் முக்கிய பணியாளருக்கு பங்கு கொடுப்பதால் அவர் கண்டுகொள்ளமல் தேவையற்ற குப்பை பொருட்களை சேகரிக்க அனுமதிப்பதாக புகார் எழுந்துள்ளது.

இவ்வாறு சேகரிக்கப்பட்டு கிடக்கும் குப்பைகள் கொசு உற்பத்தி மையமாக மாறி வருகிறது. இதனால் பின்புறம் உள்ள தாய், சேய் நல மையத்திற்கு சிகிச்சைக்காக வரும் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் பெரிதும் பாதிப்பதாக சமூகஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘கொசுவை கட்டுப்படுத்த வேண்டிய நகராட்சி நிர்வாகமே குப்பையை சேகரித்து கொசு உற்பத்தியை பெருக்குகிறது. தாய், சேய் நல மையத்தின் பின்புறம் குப்பை சேகரிக்க கூடாது என தெரிவித்தும் யாரும் கண்டுகொள்வதாக தெரியவில்லை. எனவே நகராட்சி நிர்வாகம் குப்பை சேகரிப்பு மையமாக மாற்றிய பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தேவையற்ற குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும்’ என்றனர்.

Related Stories: