உதான் திட்டத்தில் காரைக்குடிக்கு ஏர்போர்ட் பட்ஜெட்டில் அறிவிப்பு வருமென எதிர்பார்ப்பு

காரைக்குடி, ஜன. 28: மத்திய அரசின் பட்ஜெட்டில் உதான் திட்டத்தின் கீழ் காரைக்குடி பகுதியில் சிறு விமான நிலையம் அமைக்க வேண்டும் என தொழில் வணிகக்கழகம் சார்பில் அதன் தலைவர் சாமிதிராவிடமணி நிதி அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில், ‘மத்திய அரசின் பட்ஜெட் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. மத்தியஅரசு வேறுபாடற்ற கண்ணோட்டத்துடன் 2020- 2021 ஆண்டு நிதிநிலையில் அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கிறோம். வேளாண்மைக்கு அதிகமாக திட்டங்களை தீட்ட வேண்டும். சூரிய ஒளி மின்சாரம் அமைக்க மானியம் அதிகளவில் வழங்க வேண்டும். தொழிற்சாலைகளை அமைக்கும் புதிய திட்டமான இண்டஸ்ட்ரீயல் காரிடர் திட்டத்தில் கன்னியாகுமாரி முதல் பெரும்புதூர் வரை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் காரைக்குடி நகரை இணைக்க வேண்டும். தவிர இப்பகுதியில் ராணுவத்தளவாட உற்பத்தி தொழிலை உள்ளடக்கிய தொழிற்சாலை கொண்டுவர வேண்டும்.

மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் உள்நாட்டு போக்குவரத்து விமான சேவை துவங்கும் திட்டத்தில் காரைக்குடியில் சிறு விமான நிலையம் அமைக்க வேண்டும். திருச்சி- ராமநாதபுரம் இருவழிப்பாதையை 4 வழிபாதையாக மாற்ற வேண்டும். வடமாநில சுற்றுலாபயணிகள், சரக்கு வாகனங்கள் விபத்தில்லாமல் விரைவாக ராமேஸ்வரம், தூத்துக்குடி, கன்னியாகுமாரி செல்ல கிழக்கு கடற்கரை சாலையுடன் இணைக்க வேண்டும். வாலிநோக்கத்தில் பழைய கப்பல் உடைக்கும் தொழில்நிறுவனம். தேவிப்பட்டிணம், தொண்டி, ஜெகதாப்பட்டணம் போன்ற பகுதிகளில் மீன் பிடிதுறைமுகம், வணிகம் சார்ந்த பொருள் போக்குவரத்து சிறு துறைமுகம் கொண்டுவர வேண்டும். 60 ஆண்டுகளாக மக்களின் எதிர்பார்பாக உள்ள காரைக்குடி, திருப்புத்தூர், மேலூர் வழியாக மதுரைக்கு புதிய ரயில் பாதை மற்றும் தேவகோட்டை, திருவாடனை, ஆர்எஸ்மங்கலம், ராமநாதபுரம், சாயல்குடி வழியாக தூத்துக்குடிக்கு புதிய ரயில் பாதை அமைக்க பட்ஜெட்டில் அறிவிப்பு செய்து நிதி ஒதுக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.

Related Stories: