தென்மேற்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவில்லை

ஊட்டி, டிச.5:நீலகிரி  மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த தென்மேற்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட  விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தாமதப்படுத்தி வந்த நிலையில், ஓரிரு  நாட்களில் நிவாரண தொகை வழங்கப்படும் என அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.  நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 3ம்  தேதி தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்தது. இதில் ஊட்டி, கூடலூர், பந்தலூர்  மற்றும் குந்தா பகுதிகளில் கன மழை கொட்டித் தீர்த்தது. இந்த மழையால்,  விவசாய நிலங்கள் அதிகளவு பாதிக்கப்பட்டன. குறிப்பாக, அவலாஞ்சி மற்றும்  சுற்றுப்புற பகுதிகளில் ஒரே இரவில் 1300 மி.மீ. மழை கொட்டியது. இதில்,  அவலாஞ்சி, முத்தோரை பாலாடா, நஞ்சநாடு, இத்தலார் போன்ற பகுதிகளில்  பயிரிடப்பட்டிருந்த 100 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் மழை நீர்  தேங்கியது. அதேபோல் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளிலும் பல ஏக்கர்  பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன. சில இடங்களில் விவசாய  நிலங்களில் இருந்த பயிர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. இதில், ஏராளமான  விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட விவசாய  நிலங்களை தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள்  பார்வையிட்டனர். மழையால் உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம்  நிவாரணம் வழங்கியது. மேலும், உடனடியாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு  நிவாரணத் தொகை வழங்கப்படும் என தெரிவித்தனர்.

மாவட்ட நிர்வாகமும்  பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள் குறித்த ஆய்வு மேற்கொண்டு, நிவாரண தொகை  ஒதுக்கீடு செய்ய அரசுக்கு பரிந்துரை செய்தது. இதையடுத்து தமிழக அரசும்  நிவாரண தொகையும் ஒதுக்கீடு செய்தது. ஆனால், இதுவரை பாதிக்கப்பட்ட  விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. இதனால்  விவசாயிகள், பாதிக்கப்பட்ட நிலங்களில் மீண்டும் பயிரிடுவதற்காக மேம்பாட்டு  பணிகளை மேற்கொள்ள முடியாமல் திணறி வருகின்றனர். போதுமான பணம் இன்றி  விவசாயிகள் மீண்டும் பயிரிடுவதற்கான எந்த ஒரு பணிகளையும் துவக்க முடியாமல்,  அரசின் நிவாரணத் தொகையை எதிர்பார்த்து இருந்தனர். ஆனால், இதுவரை நிவாரண தொகை வழங்கப்படாமல் காலம் தாழ்த்தி வந்தனர்.

இதற்கிடையில்,  கடந்த நான்கு நாட்களாக பெய்த மழையால், மீண்டும் பல இடங்களில் விவசாய  நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இம்முறை கேத்தி பாலாடா பகுதிகளில் 100  ஏக்கருக்கு மேல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து நான்கு  மாதங்களில் நீலகிரியில் மழை பெய்து வரும் நிலையில், விவசாயிகள்  பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அரசின் நிவாரண தொகை உடனடியாக வழங்க வேண்டும்  என வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து தோட்டக்கலைத்துறை இணை  இயக்குநர் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த  மழையால், 1263 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நிவாரண தொகை  அரசு வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.13  ஆயிரத்து 500 வழங்கப்படும்.

இதற்கான பணிகள் முடிந்த நிலையில், பணம்  பட்டுவாடா செய்வதற்காக வங்கிகளில் பணம் செலுத்தப்பட்டுள்ளது.  ஓரிரு  நாட்களில் இந்த நிவாரண தொகை விவசாயிகளை சென்றடையும். மேலும், நீலகிரி  மாவட்டம் மலை மாவட்டம் என்பதாலும், இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகளின்  விதைகள் விலை மற்றும் செலவு அனைத்தும் அதிகம் என்பதால், இழப்பீடு அதிகம்  ஏற்படுகிறது. எனவே, நீலகிரி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்படும்  விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வழங்க அரசுக்கு மாவட்ட  நிர்வாகம் மூலம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது, இந்த தொகை வந்தால்,  விவசாயிகளின் நஷ்டம் குறைய வாய்ப்புள்ளது என்றார்.

Related Stories: