சிவகாசியில் கழிவுநீர் கலந்து வரும் குடிநீர்

சிவகாசி, நவ. 14: சிவகாசியில் குடிநீர் விநியோகத்தில் கழிவுநீர் கலந்து வருவதால், பொதுமக்களுக்கு நோய் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. சிவகாசி நகராட்சியில் 7 மேல்நிலைத்தொட்டி, 2 கீழ்நிலைத்தொட்டி மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த குடிநீர் தொட்டிகளை சரியாக சுத்தம் செய்வதில்லை. இதனால், நகரில் விநியோகம் செய்யும் குடிநீரில் புழுக்கள் கலந்து வருவதாக புகார் கூறுகின்றனர். நகராட்சியில் தற்காலிக பணியாளர்கள் இல்லை. இதனால் குடிநீர் தொட்டிகள் சரிவர சுத்தம் செய்யப்படுவதில்லை. பிளீச்சிங் பவுடர் அடிக்கடி பயன்படுத்துவதில்லை. மேலும், நகரில் பல இடங்களில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. வாறுகாலும் முறையாக அகற்றப்படாததால், சாலையில் கழிவுநீர் ஆங்காங்கே பெருக்கெடுத்து ஓடுகிறது. சில இடங்களில் குடிநீர் குழாய் உடைப்பில் கழிவுநீர் கலக்கிறது.

சிவகாசி சிவன்கோவில் அருகில் நேற்று காலை குடிநீர் விநியோகம் செய்தனர். அப்போது, வாறுகால் கழிவுநீர் கலந்து சேறும் சகதியுமாக குடிநீர் வந்தது. இதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். குடிநீர் பயன்படுத்த முடியாத அளவு இருந்ததால், நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சுகாதாரப்பணி மேற்பார்வையாளர்கள் நேரில் வந்து குடிநீர் குழாய் அடைப்பை சீரமைப்பதாக உறுதியளித்தனர்.

நகரில் பல இடங்களில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், குடிநீர் கலங்கலாக வருகிறது. நகராட்சி அதிகாரிகள் குழாய் உடைப்பை சீரமைப்பதில் மெத்தனம் காட்டுகின்றனர்.

தற்போது நகரில் வயிற்றுப்போக்கு, காய்ச்சல் பரவி வருகிறது. ஆனால், சுகாதாரப் பணிகளை மேற்கொள்வதில் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். மணி நகர், மேற்கு ரத வீதி, சிவன்கோவில் பகுதிகளில் வாறுகால் நிரம்பி கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இந்த பகுதியில் வாறுகால் கழிவுநீர் சாலையில் ஓடுவதால் துர்நாற்றம் ஏற்படுவதுடன், சுகாதாரக்கேடு நிலவுகிறது. எனவே, நகராட்சி அதிகாரிகள் அடிப்படையில் சுகாதாரப்பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: