ராஜபாளையம் தொகுதியில் புதிதாக அரசு மகளிர் கல்லூரி அமைக்க நடவடிக்கை தங்கப்பாண்டியன் எம்எல்ஏ பேச்சு

ராஜபாளையம், ஏப். 18: ராஜபாளையம் தொகுதியில் தென்காசி நாடாளுமன்றத் தொகுதியின் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் வேட்பாளர் டாக்டர்.ராணி குமாரை ஆதரித்து இறுதி கட்ட பிரசார பேரணி நடைபெற்றது. ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன், தனுஷ் எம்.குமார் எம்பி ஆகியோர் கலந்து கொண்ட பேரணியானது, ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோவில், பெரியார் சிலைமுதல் பஞ்சுமார்க்கெட் நேரு சிலை வரையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பேசிய சட்டமன்ற உறுப்பினர், நான் கடந்தமுறை எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினாரானது முதல் தற்போது வரையில் ராஜபாளையம் தொகுதி வளர்ச்சிக்கு ரயில்வே மேம்பாலம், தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம், ராஜபாளையம் வட்டத்தை சிவகாசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து பிரித்து சிவகாசி கோட்டாட்சியர் அலுவலகத்துடன் இணைத்தல் மற்றும் வில்லிபுத்தூர், கிருஷ்ணன்கோவிலில் செயல்பட்டு வரும் வட்டார அலுவலகத்தை பிரித்து ராஜபாளையம் தொகுதி மக்களுக்கென தென்காசி சாலையில் தனியாய கிளை வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மேலும் ராஜபாளையம் தொகுதியில் புதிதாக அரசு மகளிர் கலை கல்லூரி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, இந்தியா கூட்டணி வெற்றிபெற்றதும் அதற்கான பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

அதனை தொடர்ந்து பேசிய வேட்பாளர், பொதுமக்களால் பாராட்டப்படும் நமது முதல்வர் தமிழகத்தில் செயல்படுத்திய பல்வேறு திட்டங்கள் இந்தியா முழுவதும் கிடைத்திட ஆதரவளிக்க வேண்டும் என்றார். இப்பேரணியில் ஒன்றிய சேர்மன் சிங்கராஜ், நகராட்சி சேர்மன் பவித்ரா ஷியாம், நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, சேத்தூர் பேரூராட்சி சேர்மன்கள் பாலசுப்பிரமணியம் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கவுன்சிலர்கள், வார்டு செயலாளர்கள், இந்தியா கூட்டணியின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

The post ராஜபாளையம் தொகுதியில் புதிதாக அரசு மகளிர் கல்லூரி அமைக்க நடவடிக்கை தங்கப்பாண்டியன் எம்எல்ஏ பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: