அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

விருதுநகர், அக்.18: விருதுநகரில் அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் ரோசல்பட்டி ஊராட்சி அலுவலகம் எதிரில் எம்டி முருகன் நகர் உள்ளது. இந்த நகரில் 5 தெருக்களில் சுமார் 80 வீடுகள் உள்ளன. இந்த முருகன் நகரில் ஒரு குறிப்பிட்ட தெருவிற்கு மட்டும் ரோடு, வாறுகால் கட்டப்பட்டு வருகிறது. கழிவுநீர் கண்மாயில் போய் சேரும் வகையில் கட்டுகின்றனர். இதற்கு மற்ற தெரு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்களது தெருவிற்கு ரோடு, வாறுகால் கட்ட வேண்டும். கட்டப்படும் வாறுகால் கழிவுநீர் கண்மாயில் போய் சேராத வகையில் மெயின் ரோடு வழியாக கடத்த வேண்டும். முருகன் நகரில் தெருவிளக்குகள் அமைத்து தர வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைகளை முன் வைத்து மல்லாங்கிணறு ரோட்டில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த ரூரல் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஊராட்சி மூலம் உரிய ஏற்பாடு செய்வதாக கூறியதை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: