நிலச்சரிவு பகுதியில் அந்தரத்தில் தொங்கும் பாறை

மஞ்சூர், அக்.17:  நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் அந்தரத்தில் தொங்கும் பாறையால் விபத்து அபாயம் உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக மஞ்சூர் மற்றும் சுற்றுபுற பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை வெளுத்து வாங்குகிறது.

நேற்று முன்தினம் பிற்பகல் பெய்த அடைமழையில் குந்தாபாலம் அருகே பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பாறைகள், கற்கள் உருண்டு ரோட்டில் விழுந்தது. இதனால் மஞ்சூர் ஊட்டி மற்றும் குன்னூர் பகுதிகளுக்கான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நெடுஞ்சாலைதுறையினர் ஜேசிபி இயந்திரங்களுடன் விரைந்து சென்று சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில் பெரிய அளவிலான பாறைகள் என்பதால் இரவு நேரத்தில் அகற்ற முடியாததாலும் மேலும் பாறைகள் விழுந்து கொண்டிருந்ததால் வாகனங்கள் செல்லும் வகையில் சாலை சீரமைக்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று காலை மீண்டும் சீரமைப்பு பணிகள் துவங்கியது. ஜேசிபி இயந்திரத்தின் உதவியோடு பாறைகள் குந்தா அணை பகுதியில் உருட்டி விடப்பட்டது. இதேபோல் டன் கணக்கில் விழுந்து கிடந்த கற்களும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. சீரமைப்பு பணிகளை முன்னிட்டு பாதுகாப்பு கருதி அப்பகுதியில் போலீசார் மூலம் போக்குவரத்து ஒழுங்குப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மேற்புறம் பெரிய அளவிலான பாறைகள் அந்தரத்தில் தொங்கியபடி காட்சியளிக்கிறது. மீண்டும் இப்பகுதியில் மழை பெய்தால் எந்த நேரத்திலும் பாறைகள் உருண்டு விழும் அபாயகர நிலையில் காணப்படுகிறது. இந்த பாறைகளால் பாதிப்போ, சேதாரமோ ஏற்படும் முன் அவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: