செங்கம் கூட்டுறவு சங்கத்தில் பால் கொள்முதல் தொகையை வாரம் ஒருமுறை வழங்க வேண்டும் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

செங்கம், அக்.10: செங்கம்  பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பால் கொள்முதல் செய்ததற்கான தொகையை வாரம் ஒருமுறை வழங்க வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கம் டவுன் பெருமாள் கோயில் பின்புறம் பால் கூட்டுறவு சங்கம் அமைந்துள்ளது. இதில், சுமார் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.இந்நிலையில், கடந்த பல ஆண்டுகளாக பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் பால் உற்பத்தியாளர்கள் பால் கொள்முதல் செய்ததற்கான பணம், வாரத்திற்கு ஒருமுறை பட்டுவாடா செய்யப்பட்டு வந்தது. ஆனால், கடந்த 3 மாதமாக இந்த நடைமுறையினை சங்க செயலாளர் மற்றும் அலுவலர்கள் பின்பற்றாமல் மாதத்திற்கு ஒருமுறை பணப்பட்டுவாடா ெசய்து வருகின்றனர்.

இதனால், பால் உற்பத்தியாளர்கள் தங்களது கறவை மாடுகளுக்கு தீவனம் வாங்கவும், அன்றாட செலவுகளுக்கும், மருத்துவ செலவுகளுக்கும் கடன் வாங்கி செலவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, பால் உற்பத்தியாளர்கள் நலனை கருத்தில் கொண்டு பழைய நடைமுறையில் வாரத்திற்கு ஒருமுறை பணப்பட்டுவாடா செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: