நீர் நிலைகளில் இருக்கும் ஆக்கிரமிப்பை அகற்ற கலெக்டர் உத்தரவு

சிவகங்கை, ஆக.22: சிவகங்கை மாவட்டத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளதாக கலெக்டர் பேசினார். சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் சாலைப் பாதுகாப்பு மற்றும் நீர்நிலை ஆதாரங்கள் பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. எஸ்பி ரோஹித்நாதன் முன்னிலை வகித்தார். கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை வகித்து பேசியதாவது:சாலைப் பாதுகாப்பு குறித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாவட்டம் முழுவதும் நீர்நிலை புறம்போக்குகள் கணக்கெடுக்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் மழை காலங்களில் கிடைக்கக் கூடிய நீர், முழுமையாக நீர்நிலைகளில் தேங்கும் வாய்ப்பு ஏற்படும். நீர்வரத்து கால்வாய்கள் சரியாக இருந்தால்தான் முழுமையாக நீர் வந்து சேரும். எனவே வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றுவதில் அலுவலர்கள் கவனம் எடுத்து செயல்பட்டு வரும் மழை காலத்திற்குள் மாவட்டத்திலுள்ள அனைத்து நீர் நிலை ஆதாரங்களையும் சரி செய்ய வேண்டும். இவ்வாறு பேசினார். கூட்டத்தில் ஆர்டிஓக்கள் செல்வக்குமாரி, சங்கரநாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமபிரதீபன், ஏஎஸ்பி மங்களேஸ்வரன், சிவகங்கை டிஎஸ்பி அப்துல்கபூர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: